நேற்று மட்டும் 5, 200 பேர் பணி ஓய்வு... வருகின்ற டிசம்பருக்குள் 15, 000 பேர் ஓய்வா..? அரசின் திட்டம் என்ன..?
இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறுவோர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 60 வயதை எட்டிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 200 பேர் செவ்வாய்க்கிழமையுடன் (மே 31) ஓய்வு பெற்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறுவோர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 15 லட்சம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 9 லட்சம் பணியிடங்களில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த அதி முக ஆட்சிக் காலத்தில் இருமுறை உயர்த்தப்பட்டது. முதலில் 59 ஆகவும், அதன்பின்பு, 60 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
ஓய்வுக்காலம்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 58 வயதை எட்டி ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஊழியர்கள், அரசின் உத்தரவு காரணமாக பணி நீட்டிப்பு வாய்ப்புப் பெற்றனர். அவ்வாறு பணி நீட்டிப் புபெற்றோர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து மே 31-ஆம் தேதியுடன் 60 வயதை எட்டினர். அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமையுடன் (மே 31) ஓய்வு பெற் றனர். தலைமைச் செயலகம் உள்பட தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 200 என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என பல்வேறு வாரியங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆயிரம் பேர் வரை இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தலைமைச் செயலகம்:
தமிழ்நாட்டின் முக்கியமான ஒன்றான தலைமைச் செயலகத்தில் மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை 49 பேர் ஓய்வு பெற்றனர். அவர்களில் 20 பேர் இணை செயலாளர் முதல் சார்பு செயலாளர் வரையிலான அதிகாரிகள் அந்தஸ்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே பணிச்சுமை உள்ள சூழ்நிலைகளில் 49 பேர் ஓய்வு பெற்று சென்றுள்ளதால் புதிய ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நிகழ் நிதியாண்டில் மட்டும் (2022 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31) 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். இந்த ஆண்டின் இறுதியில் மட்டும் மொத்தமாக 15 ஆயிரம் பேர் ஓய்வு வயதை எட்டவுள்ளனர். 20 ஆயிரம் அரசு ஊழியர் களின் ஓய்வு காரணமாக அவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களின் அளவு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என நிதித் துறை மதிப்பிட்டுள்ளது. போக்குவரத்து, மின்சாரம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் இருந்தும் ஏராளமான ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதால் அவற்றுக்கும் நிதிச்சுமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுத் துறைகளில் இருந்து ஏராளமான ஊழியர்களும், அதிகாரிகளும் ஓய்வு பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் உள்ளன.
இந்தத் தேர்வுகளை விரைந்து நடத்தி முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இதனால், வரும் டிசம்பருக்குள் ஏற்படக் கூடிய 15 ஆயிரம் காலிப் பணியிடங்களின் தேவை, புதிய ஊழியர்கள் நியமனம் மூலமாக பூர்த்தி செய்யப்படும் என தேர்வாணைய சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்