Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon 2025: இவ்வாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்பதால் வெயிலின் தாக்கும் குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக அந்தமான் பகுதிகளில் மே மாதத்தின் இறுதியில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பத்து நாட்கள் முன்னதாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். மே 13ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இரண்டு வாரத்து முன்னதாக தொடங்கும் சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் மழையை விட 5 சதவீதம் அதிகமாக மழை பெய்யும்” எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தமிழகத்தில் நேற்று தொடங்கியது. இந்த அக்னி வெயில் 29ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களை குளிர்விக்கும் பொருட்டு இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் நிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்து காணப்படுகிறது.
அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும் காற்றை தடுக்கின்ற வெப்ப அலை மற்றும் நீரோட்டம் வங்கக் கடல் பகுதியில் நீடிப்பதால் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த மழை காரணமாக அக்னி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ய உள்ளதால் 104 டிகிரியை தாண்டி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















