Goli Soda: எத்தன கோலா வந்தாலும், சோடாதான் ஹீரோ.. முதன்முதலில் வேலூரில் தயாரான கோலி சோடாவுக்கு வயது 100
2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும் நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும்பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவார்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமா சிக்கலாரிடம் (சிவாஜி கணேசனிடம்) சோடா குடிக்கீகளான்னு கேட்கும் அளவில் வரவேற்பின் அம்சமாகவே கோலி சோடா இருந்து உள்ளது. அதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை.1970-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கோலி சோடா விற்பனை இருந்தது. ஆரஞ்சு, மாங்கோ, லெமன், கிரேப் , பன்னீர் சோடா , சாதாரண சோடா (உப்பு சோடா) போன்ற பல வகைகள் விற்கப்பட்டன.
தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர். வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கோலி சோடா தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார். இவர் இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார்.
1924ம் ஆண்டு முதன் முதலில் கோலி சோடாவை அவர் தயாரித்தார். தான் தயாரித்த கோலி சோடாவை முதலில் சிறிய பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்தார். அப்போது வேலூருக்கு வரும் பெரும்பாலானவர்கள் கோலி சோடா குடித்துள்ளனர். இதனால் வெளியூர், வெளி மாநிலங்களிலும் இதன் சிறப்பு பரவ தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அப்போது குளிர்பானத்தில் கோலிசோடா மட்டுமே இடம்பெற்றிருந்தது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கோலி சோடாவைத்தான் வாங்கி தருவார்கள். இதனால் பெட்டிக்கடைகள், பலரசரக்கு கடைகளில் கோலி சோடா முக்கிய இடம் பிடித்திருந்தது. அதன்பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கியது.
தற்போது ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு குளிர்பானங்கள் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. என்றாலும் கோலி சோடாவுக்கான மவுசு இதுநாள் வரை குறையவில்லை. இவ்வளவு பிரபலமான கோலி சோடா தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தயாரானது வேலூரில்தான் என்பது பெருமைக்குரியதாகும். இந்த கோலி சோடாவை முதன் முதலில் தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில் நினைவாக இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், புளூபெர்ரி கோலா, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பச்சை என பலவிதமான கோலி சோடாக்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து வட மாவட்டங்கள் முழுவதும் கோலி சோடா விற்பனையை விரிவுபடுத்தி உள்ளனர்.
கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட கோலி சோடா தற்போது 100வது ஆண்டை எட்டி வருகிறது. ஜெர்மனியில் இருந்து பாட்டில்களை இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பாட்டில்கள் கொண்டு வந்து சோடா தயாரித்து வருகின்றனர். 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. காரணமாக 2017ம் ஆண்டுக்கு பிறகு கோலி சோடா விற்பனை புதிய உத்வேகத்தை ஏற்படுத்திவிட்டது.