தமிழர் வாழ்வில் இரண்டர கலந்த பொங்கல் திருநாளும் மஞ்சளும்...!
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சள் பட்டினம் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பானையில் கட்ட மஞ்சளை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சள் பட்டினம் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொங்கல் வைக்கும்போது பானையில் கட்ட மஞ்சளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதை விமர்சையாக கொண்டாடுவது தான் நம் பண்பாடு. அதிலும் பொங்கல் என்று வந்துவிட்டால் போதும். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் இது. இந்த பண்டிகையானது இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இயற்கை தன் வளங்களை ஜாதி மத பேதம் பார்க்காமல் தான் அள்ளித் தருகிறது. பொங்கல் பண்டிகைக்கு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு எந்த ஒரு வரலாறும் இல்லை. ஆனால் வரலாற்றில் இந்த பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிகாலத்தில் மனிதன் பழங்களையும், காய்களையும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான். படிப்படியாக நெருப்பினை கண்டுபிடித்து, விவசாயத்தையும் கண்டுபிடித்து நாகரிக வளர்ச்சியை அறிந்து, முன்னேற்றமடைந்தால் தான் மனிதன், மிருகங்களில் இருந்து வேறுபட்டு காண்கின்றான்.
மனிதனின் பல்வேறு விதமான வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருப்பது இந்த இயற்கை தான். இயற்கை என்று சொல்லும்போது நம் பூமியில் மனித உயிரினங்களும், பலவகையான புழு பூச்சிகளும் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது சூரிய பகவான். நம் பூமியானது இருளில் இருந்து விலகி வெளிச்சத்தை அடைகிறது என்றால் இதற்குக் காரணமும் சூரிய பகவான்தான். நம்மை வாழவைக்கும் அந்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை. இதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த தை திருநாள்.
தை மாதத்தில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட பச்சரிசியை அந்த சூரிய பகவானுக்கு படைப்பதற்காக பொங்கல் வைத்தார்கள். நம் வாழ்க்கையானது இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த அரிசியுடன் வெல்லத்தையும் சேர்த்தார்கள். அரிசியைப் போலவே புதியதாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளையும் சமைத்து சூரியனுக்கு படைத்தார்கள். இப்படி இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களில் விஷத்தன்மை ஏதாவது இருந்தால் அது மஞ்சள் கொத்தில் இருந்து வீசப்படும் வாசத்திலிருந்து நீங்கும். இஞ்சிக்கும் விஷத் தன்மையை நீக்கும் தன்மை உடையது. இது மருத்துவம் சார்ந்த உண்மையும் கூட. அதாவதுபொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் கொத்து கட்டி பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பானையானது சூடேறும் போது மஞ்சள் மனமும் சேர்ந்து சமையலுடன் கலந்திருக்கும். இதன்மூலம் சமைக்கும் பொருளில் விஷத்தன்மை நீங்கும் என்பதற்காக மஞ்சள் கொத்தை பொங்கல் பானையில் கட்டும் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். இதனால்தான் இப்போது வரை மஞ்சள் கொத்து பானையில் கட்டப்படுகிறது.
பரமக்குடி அருகே வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது மஞ்சள்பட்டினம். இங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துக்கள் சாகுபடி செய்வது வழக்கம். மஞ்சள்பட்டினம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஆறு மாத பயிரான மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை நன்றாக கைகொடுத்த நிலையில் நன்கு வளர்ந்து, பூமிக்கு கீழ் கிழங்கு வளர்ச்சி அடைந்து அறுவடை செய்யப்பட்டுள்ளது. நாளை பொங்கல் என்பதால் இரு நாட்களுக்கு முன்பு, அறுவடை செய்து சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும், வழக்கத்தை விட இந்த ஆண்டு மிக குறைந்த அளவிலேயே மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மஞ்சள் செடிகளுக்கு கடும் கிராக்கி ஏற்படும் என்றும், விலை கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கடந்த 12ஆம் தேதி மஞ்சள்பட்டினத்தில் விவசாயிகள் மஞ்சள் செடிகளை அறுவடை செய்து ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்று அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் செடிகள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் சுற்றுப்புற கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது.