OPS: மழையால் வந்தது தடை.. தொடங்கும் முன்பே ரத்தான ஓ.பி.எஸ்.சின் புரட்சி பயணம்..!
O Panneerselvam: ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் புரட்சிப் பயணம் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க இன்று காஞ்சிபுரத்தில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கியிருந்த நிலையில் மழை காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமசந்திரன் அறிவித்துள்ளார். இந்த புரட்சி பயணம் மீண்டும் தொடங்கும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ். புரட்சி பயணம்
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் சார்பில் காஞ்சிபுரம் அருகே களியனூர் பகுதியில் புரட்சி பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புரட்சி பயணத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மாலை முதலே மழை பெய்து வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியிலும் மழை பெய்ததால் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அப்படியிருக்கையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி மேடைக்கு வந்தார். ஓ. பன்னீர்செல்வம்.
கனமழையும் ,ஓபிஎஸ் புரட்சி பயணமும்
அரசியல் புரட்சி பயண பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்தார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மாலை அணிவித்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, அண்ணாவின் நினைவு இல்லத்துக்குச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர், அங்குள்ள வருகைப் பதிவேட்டில், ' அண்ணாவின் தொண்டன் ' என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், வைத்தியலிங்கம், ராயபுரம் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பேரறிஞர் அண்ணாவின் தொண்டர்கள் எங்கு சென்றாலும் மழை பொழியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். ஓபிஎஸ் அண்ணா நினைவில் இல்லத்திற்கு வருகை புரிந்த பொழுது கனமழை ஆனது பெய்தது. அவர் திரும்பி செல்லும் போது மழை நின்ற நிலையில், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கன மழை பெய்து துவங்கியதால், பொதுக்கூட்டம் நடைபெற இருந்த இடம் பரபரப்பானது. மழையால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆங்காங்கே தெரிந்து ஓடினர். திறந்தவெளியில், இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் குடை இல்லாமல் தார்ப்பாயிலும், நாற்காலியை குடையாக பயன்படுத்தியும், நின்றிருந்தனர். சிலர் கனமழையால் கூட்டத்தை விட்டும் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் மீண்டும் சில நிமிடங்கள் கழித்து மழை பெய்வது சற்று நின்றது. இதன்பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என கருதி பொதுக்கூட்டம் துவங்கப்பட்டு, மேடையில் மூன்றாம் கட்ட தலைவர்கள் உரையாற்ற துவங்கினர். அடுத்த சில நிமிடங்களிலே மீண்டும் அழைத்து வாங்க பட்ட நிலையில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது, ஓ பன்னீர்செல்வம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
ஓபிஎஸ் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நடைமேடையில் மழையில் நனைந்தபடி நடந்து வந்தார். அப்பொழுது, மழையில் நனைந்தபடி தொண்டர்களும் ஓபிஎஸ்-க்கு பூங்கொத்து கொடுத்து, ரோஜா பூ கொடுத்தும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். இதன் எடுத்து பொதுக்கூட்டம் துவங்கியவுடன் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர் .வி. ரஞ்சித் குமார், மழையும் பொறுப்பெடுத்தாமல் இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து. வைத்தியலிங்கத்தை பேசுவதற்கு அழைத்தார்.
வைத்திலிங்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்,அடுத்த முதலமைச்சர் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக ஓபிஎஸ் வருவார் என தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் பேசாமலேயே இந்த கூட்டம் நிறைவு பெற்றது தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் மழை நின்ற பின் ஓ.பி.எஸ். அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி. பிரபாகரன், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.வி. ரஞ்சித் குமார் ஆகியோர் பேசிய நிலையில் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் சிறப்புரையாற்ற தொடங்கிய நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் புரட்சி பயணம் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மேடையை விட்டு இறங்கி சென்றனர்.இருப்பினும் மேடையில் நன்றியுரை கூறிய ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி ஓபிஎஸ் அவர்களின் புரட்சிப் பயணம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்றும்,அது முடிவதற்குள்ளாக எடப்பாடி பழனிச்சாமி சிறைக்குச் செல்வார் என தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். - ரஜினி சந்திப்பு
நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதுமான தமது சுற்றுப் பயணத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்துகள் மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்சின் இந்த பயணம் அவரது அரசியல் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துமா,அவர் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஏதும் அறிவிப்பாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.