Erode East By Election: விறுவிறுப்பாகும் பரப்புரை.. இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துணிகளுக்கு இஸ்திரி போட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறுப்பான இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது, இன்று வேட்புமனு சரிபார்க்கப்பட்டு வருகிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி ஆதரவு வேட்பாளர்:
இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
இருதரப்பு அதிமுகவும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். இதனால் யார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்? யாருக்கு இரட்டை இலை வழங்கப்படும்? அல்லது இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? அல்லது இருவரும் இணைந்து ஒரு வேட்பாளரை அறிவிப்பார்களா என்ற குழப்பமும் இருந்தது.
இதனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார். மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கையில், “இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுகிறார். தென்னரசுக்காக இல்லை, இரட்டை இலைக்கு மக்கள் வாக்களிக்க பிரச்சாரம் செய்வோம், வாக்கு சேகரிப்போம். இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு, அதன் வெற்றிக்காக பாடுபடுவோம்." என தெரிவித்தார்.
இஸ்திரி, டீ:
அதிமுக வேட்பாளர் தென்னரசு நேற்றைய தினம் வேட்பமனு தாக்கல் செய்தார். அவரை ஆதரித்து அதிமுக தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை தென்னரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஈடுபட்டார். அப்போது கச்சேரி சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார், துணிகளுக்கு இஸ்திரி போட்டும், டீக்கடையில் மக்களுக்கு டீ போட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த சுவாரசியமான சம்பவம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.