Ponmudi: மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி; அமைச்சராக பதவியேற்பு எப்போது?
சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும் ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்தது.
சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி முறையிட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது. இதற்கு முன், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடியிடம் இருந்த அமைச்சர் பொறுப்பு மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். இது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியும், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநருக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் இன்று அதாவது மார்ச் 13ஆம் தேதி மாலை அல்லது நாளை பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதி மன்றம் சொத்துகுவிப்பு வழக்கில் வழங்கிய தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்தது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
சிறைத்தண்டனை:
இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இதில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 21ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தலா ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி வசம் இருந்த அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் அவரது சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,