லட்சத்தீவு நிர்வாகியை உடனே நீக்க வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
லட்சத்தீவில் மத்திய அரசு நியமித்துள்ள நிர்வாகி பிரபுல் பட்டேலை உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
லட்சத்தீவின் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருபவர் பிரபுல் பட்டேல். கடந்த 2020ம் ஆண்டு அந்த தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டது முதல் தீவில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும், சீர்த்திருத்தங்களுக்கும் தீவில் வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அவரை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலங்களவை எம்.பி. கரீம், பிரபுல் பட்டேலை திரும்ப பெற வேண்டும் என்றும், அவர் பிறப்பித்த உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், லட்சத்தீவில் பிரபுல் பட்டேல் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த தீவின் மாவட்ட ஆட்சியர் பிரபுல் பட்டேல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அளித்த பேட்டி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் லட்சத்தீவு நிர்வாகியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ லட்சத்தீவுகளில் புதிய விதிகளை திணிக்கும் முயற்சியை நியாயப்படுத்தி அந்த தீவுகளின் ஆட்சித் தலைவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சித் தலைவர் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்.
லட்சத்தீகளில் புதிய விதிகளை திணிக்கும் முயற்சியை நியாயப்படுத்தி அந்தத தீவுகளின் ஆட்சித் தலைவர் (Collector) அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) May 29, 2021
ஆட்சித் தலைவர் வெந்த பண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்
மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும். அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்சித் தலைவரை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும்.”
மத்திய அரசு நியமித்த நிர்வாகியை (administrator) உடனடியாக நீக்க வேண்டும். அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆட்சித் தலைவரை உடனடியாகப் பணிமாற்றம் செய்யவேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) May 29, 2021
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது லட்சத்தீவு நிர்வாகியாக உள்ள பிரபுல் பட்டேல், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். தற்போது பிரபுல் பட்டேல் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் விதித்துள்ள புதிய விதிகள் அங்கு வாழும் மக்களின் உணவு மற்றும் வாழ்க்கை சுதந்திரங்களுக்கு பெரும் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பல காலமாக உள்ள மீனவர்களின் கொட்டகைகளும் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு மது விற்பனை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் அந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.