Flight Serivice Delayed: சென்னையில் விடிய விடிய மழை.. பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களா தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்றைய தினம் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 10 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இன்று காலை வரை நகரம் முழுவது மிதமான மழை பெய்து வந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து, 342 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு, 12:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் இடி மின்னல் மழை பெய்ததால், விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், வானில் தத்தளித்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினார்கள்.
அதை போல் பாரீசில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் பிரான்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து 269 பயணிகளுடன் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் திருச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தறையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்துக் கொண்டு இருந்தன. ஆனால் சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தும், வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த 4 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக, சென்னைய விமான நிலையத்தில் தறையிறங்கின. அததோடு பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 8மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது.
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பாங்க்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரீஸ், ஃபிராங்க்பார்ட், இலங்கை உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.