மேலும் அறிய
வைகை ஆற்றில் திடீர் வெள்ளம், மூழ்கிய ராட்டினங்கள்.. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு !
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடைமழையால் வைகை ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இடுப்பளவு உயரம் வரை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

வைகை ஆற்றில் ராட்டினம்
Source : whats app
ராட்டினங்கள் அனைத்தும் தண்ணீருக்குள் சிக்கியதால் சுமார் 100க்கும் மேற்பட்ட ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் வைகை ஆற்றில் வீர அழகர்
மதுரையில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அழகர்மலையில் இருந்து புறப்படும் கள்ளழகர் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஆற்றில் இறங்கி அருள்பாலிப்பார். மறுநாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கி, தடம் பார்க்கும் நிகழ்வில் பங்கேற்பார். இதே போல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுவது வழக்கம். இதனால் மானாமதுரை பகுதி களைகட்டும். இந்நிலையில் மானாமதுரை சித்திரைத் திருவிழாவிற்கு போடப்பட்ட ராட்டிங்கள் திடீர் மழையால் ஆற்றில் சிக்கி உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராட்டினங்களை அகற்றும் பணி
சிவகங்கை மாவட்டம் மானாமதுறையில் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்களும் பொதுமக்களும் பொழுதுபோக்க பயன்படுத்திய ராட்டினங்கள் வைகை ஆற்றின் கரையும், ஆற்றுக்குள்ளும் அமைக்கப்பட்டிருந்தன. திருவிழா முடிவடைந்த நிலையில், ராட்டினங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ராட்டினங்கள் அனைத்தும் தண்ணீருக்குள் சிக்கியது
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடைமழையால் வைகை ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இடுப்பளவு உயரம் வரை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, ராட்டினங்கள் அனைத்தும் தண்ணீருக்குள் சிக்கியதால் சுமார் 100க்கும் மேற்பட்ட ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















