Factory Bill 12 Hours: 12 மணிநேர வேலை மசோதா வாபஸ்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தையொட்டி சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தின பூங்காவில் இருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு, 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ மசோதா திரும்ப பெறப்பட்டது பற்றி எம்.எல்.ஏக்களுக்கு செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும். 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைத்த பின்னரும் அவதூறு பரப்பி வருகின்றனர். வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த, பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவே 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது. ” என தெரிவித்தார்.
விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை:
விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை, பெருமையாகவே கருதுகிறேன். சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் எனில் அதை திரும்ப பெறுவதும் துணிச்சல்தான். திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மே தின நிகழ்ச்சியில் பேசினார்.