”அவளை கொலை செஞ்சிடாதீங்க” : காதலி வீட்டு முன்பு பட்டதாரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை
காதலி வீட்டு முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள தருமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் விஜய் (25) இவர் காரைக்குடி அமராவதி புதூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., படித்துள்ளார். இதே கல்லூரியில் காரைக்குடி அருகே உள்ள மீனாவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை மகள் அபர்ணா ஸ்ரீ படித்துள்ளர். ஒரே வகுப்பில் படிக்கும்போது விஜய் மீது அபர்ணாவுக்கு காதல் இருந்துள்ளது. அதை விஜய்யிடம் அபர்ணா ஸ்ரீ தெரிவிக்க காதலை மறுத்துள்ளார். பின்தொடர்ந்து காதலை கூற விஜய் சம்மதம் தெரிவித்து காதலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் இரு சக்கரவாகனத்தில் சுற்றித் திரிந்தும் தனிமையில் அடிக்கடி இருவரும் சந்தித்து பேசி தங்கள் காதலை மேலும் வளர்த்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு முடித்து விஜய் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து வேலை பார்த்துவந்த நிலையில் காதலி வீட்டில் விஜயோடு காதல் இருப்பது தெரிய வரவே, பெற்றோர் கண்டித்து செல்ஃபோனை பிடிங்கி வைத்துக் கொண்டனர். இதை காதலி அபர்ணா ஸ்ரீ காதலனிடம் நிலைமையை கூறி உள்ளார். இதனால் விஜய் காதலி அபர்ணா ஸ்ரீயை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து காதலியின் உறவினர்கள் மற்றும் வேண்டியவர்களிடமும் சென்று தன் காதலியை திருமணம் செய்துவைக்குமாறு மன்றாடி கேட்டுள்ளார்.
ஆனால் காதலி வீட்டில் பெண் கொடுக்கமுடியாது எனவும், என்னுடைய பிள்ளையை கொலை செய்தாலும் செய்வேனே தவிர உனக்கு பெண் தரமுடியாது என மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய் காதலி பெற்றோரிடம் அடுத்த வாரம் வருவேன் பெண் தரவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தரப்பில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை காதலி அபர்ணாஸ்ரீ வீட்டிற்கு வந்த விஜய் மீண்டும் தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அப்போது காதலியின் பெற்றோர் அபர்ணாஸ்ரீயை பார்த்து நீ செத்தால் எல்லாம் சரியாகிடும் என கடுமையாக திட்டியதால் மன வேதனையடைந்த விஜய், உங்கள் மகள் மீது நான் கொண்ட காதல் உண்மையானது. காதலுக்காக உங்கள் மகளை நீங்கள் கொலை செய்யவேண்டாம்.
அவள் உயிரோடு இருக்கவேண்டும் நானே என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று காதலி வீட்டு முன்பாகவே தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீ மளமளவென அவர்மீது பற்றி எரிந்து அவர் அலறியுள்ளார், அவரது அலறல் சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவம் இடம் வந்த போலீசார் விஜயின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துமேல் விசாரணை செய்து வருகின்றனர். தான் காதலித்த பெண்ணை ஆணவ கொலை செய்துவிட வேண்டாம் என கூறி பொறியியல் பட்டதாரி இளைஞர் காதலி வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050