Erode East Election: அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்.. இபிஎஸ் தரப்புக்கு மட்டும் அனுமதி..! ஓபிஎஸ்சை ஓரங்கட்டிய தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தரப்பு நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் பழனிசாமி தரப்பு நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த அதிமுக, இரண்டு தரப்பிலும் வேட்பாளரை அறிவித்தது. ஆனால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் தொடர்பான உச்சநீதிமன்ற விசாரணையில் வெளியான உத்தரவின் பேரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றது. இதனால் இரட்டை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர். குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் கடைசி நேரத்தில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வாபஸ் பெற்றார். இதனால் அதிமுகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (பிப்ரவரி 7 ஆம் தேதி) நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உட்பட 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 40 பேர் கொண்ட பட்டியலும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கொண்ட பட்டியலும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டிருந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் கொடுக்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.