Anbumani Ramadoss: நள்ளிரவில் முதிய தம்பதி கொலை ; சட்டம் ஒழுங்கு சரியில்லை... அன்புமணி ராமதாஸ் கண்டனம்....
ஈரோடு அருகே முதிய தம்பதிகளை கொலை செய்து நகைக் கொள்ளை, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்

ஈரோடு அருகே முதிய தம்பதிகளை கொலை செய்து நகைக் கொள்ளை, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு அருகே முதிய தம்பதிகள் கொலை
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி விஜயநகரத்தில் தோட்டத்து வீட்டில் ராமசாமி (75)-பாக்கியலட்சுமி (60) தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களின் மகன் ரவிசங்கர், மகள் பானுமதி முத்தூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு ரவிசங்கர், தனது பெற்றோரை செல்போனில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் போனை எடுக்காத நிலையில் உறவினர்களை சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, தம்பதியர் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,
இந்த சமபவம் குறித்து அன்புமணி ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில்.,
சட்டம் - ஒழுங்கு சரி இல்லை
ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.
அடுத்தடுத்து நடக்கும் கொலை
அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.





















