EPS On DIG Suicide: டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசுவதற்கான தகுதியே சட்ட அமைச்சர் ரகுபதிக்கு கிடையாது, என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசுவதற்கான தகுதியே சட்ட அமைச்சர் ரகுபதிக்கு கிடையாது, என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சிபிஐ விசாரணை வேண்டும் - ஈபிஎஸ்
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “இனியாவது காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை யாராயினும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு முழுமையான ஓய்வளிக்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட காவலர் நல்வாழ்வுத்திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும். கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை வேதனயளிக்கிறது, இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவருக்கு குடும்பம், பணியில் மன அழுத்தம் இல்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே விஜயகுமார் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
ரூ.1000 உரிமைத்தொகை:
மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகுதிகள் தொடர்பான கேள்விக்கு, ”முதலில் அது வருகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. முதலில் வரட்டும் பின்பு பதிலளிக்கிறேன். பல்வேறு தகுதிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரசு அதனை முறையாக செயல்படுத்துகிறதா என்பதை பார்க்கலாம்” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
ரகுபதி சரியான அமைச்சரே கிடையாது - ஈபிஎஸ் சாடல்:
தொடர்ந்து, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் “அமைச்சர் ரகுபதியே ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அவர் ஊழல் குறித்து பேசுவதற்கு தகுதியே கிடையாது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரிடமே, ஊழல் தடுப்பு பிரிவு வழங்கப்பட்டு இருப்பதே தவறு” என எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார்.
ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதமும் - வந்த பதிலும்:
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கே.சி. வீரமணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி இருந்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, ஒரு சில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்டு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றும் விளக்கமளித்து இருந்தது. ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகளை ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதற்கும், அதனை பெற்றுக் கொண்டதற்கான சாட்சியாக ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகைச் சீட்டையும் அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட அமைச்சர் ரகுபதி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார்.