EPS Met RN Ravi: ஆளுநரைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. காரணம் என்ன?
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருள் பழக்கம், கள்ளச்சாராயம்/ விஷ சாராய மரணங்கள், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சென்னை சைதாப்பேட்டையில் சின்னமலை முதல் ஆளுநர் மாளிகை வரை பேரணியாக சென்றனர். அதிமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் சின்னமலை - வேளச்சேரி சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணி சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.
புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து திமுகவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து புகார் அளித்து உள்ளோம். புகார்களை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன பல்வேறு துறைகளில் ஊழல்கள் பெரிய அளவில் நடைபெறுகின்றன, ஆதாரங்களுடன் ஊழல்களை ஆளுநரிடம் கூறியுள்ளோம். பிரதான எதிர்கட்சியாக தினம் தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெரிவித்து உள்ளோம்”, என்றார்.
மேலும், “சட்ட ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பது குறித்தும் புகார் தெரிவித்து உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் கொலை செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் மருத்துவமனையில் உள்ளனர் ,தற்போது வரை 23 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். தஞ்சாவூரில் இரண்டு பேர் பாரில் மது குடித்து இறந்துள்ளனர். திறமையற்ற முதல்வராக உள்ளார். வேங்கைவயல் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்களை தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை.
முன்பெல்லாம் இருசக்கர வாகனத்தில் சென்றே செயின் பறிப்பு செய்தனர் தற்போது காரில் சென்று செயின் பறிப்பு செய்கின்றனர் அதற்கு காரணம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது தான், நடவடிக்கை இல்லாத காரணத்தால் தைரியமாக செய்கின்றனர்” என கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி, “ காவல்துறை மானிய கோரிக்கையில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் 2020 -31, 2021 - 32 பாலியல் வன்புணர்வு நடைபெற்ற நிலையில் 2022 - 58 பாலியல் வன்புணர்வு நடைபெற்று உள்ளது. டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யபடுகிறது. 6340 டாஸ்மாக் கடைகள் தற்போது இயங்கி வருகிறது,70 % பார் ஏற்கனவே இயங்கி வந்த நிலையில் அதில் 25% பார்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது 75 % பார்கள் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது அதன் காரணமாகவே போலி மதுபானம் விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 97% பார்கள் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது” , என தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், “உதயநிதி ஸ்டாலின் சபரீசன் 30 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக ptr பேசிய ஆடியோ வெளியே வந்துள்ளது. சாதாரண நபர் அல்ல நன்றாக படித்தவர் , பொருளாதார நிபுணர் அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில் மத்திய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 படங்கள் ரெட் ஜெயின்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளன” என்பதை சுட்டுக்காட்டினார்.