’என் உயிரே போனாலும்… என் பதவியே போனாலும்’ – சட்டமன்றத்தில் சி.எம். VS இபிஎஸ் – நடந்தது என்ன?
யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் காலம் தாழ்த்தியுள்ளனர்.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரிட்டாப்பட்டி விவசாய போராட்ட மக்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நானும் ஒரு விவசாயி. அவர்களின் வலி எனக்கு தெரியும். முதலமைச்சரிடம் ஒரு கேள்விதான் கேட்டேன். சுரங்க ஏலம் விட்டபோது மாநில அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று சொன்னது. 9 மாத காலத்துக்குள் அரசு மத்திய அரசிடம் சொல்லியிருந்தால் இந்த கஷ்டமே வந்திருக்காது.
யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் காலம் தாழ்த்தியுள்ளனர். ஆனால் நீங்கள் கொதித்த எழுந்த காரணத்தால் வழியில்லாமல் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அதுவும் இப்போதுதான் கொண்டு வந்தார்.
2023ஆம் ஆண்டே மானிய கோரிக்கை விவாதம் நடக்கும்போதே கொண்டு வர வேண்டிதானே? இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறேன். உங்கள் போராட்டத்தால்தான் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நானும் சட்டமன்றத்தில் உங்களுக்காக கடுமையாக பேசினேன்.
முறையான பதில் முதலமைச்சரிடம் வராத காரணத்தால்தான் சொன்னேன் என் உயிரை கொடுத்தாவது விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று. அப்போதுதான் முதலமைச்சர் சொன்னார் என் பதவி போனாலும் பரவாயில்லை என்று. அதற்கு முன்பு அவர் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதிமுக துணை நிற்கும். இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கு. யாரையும் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. சரியான நேரத்தில் அரசு முடிவெடுத்திருந்தால் மக்கள் இவ்வளவு கஷ்டத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். எவ்வளவு மன உளைச்சல் மக்களுக்கு. இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசவில்லை.
நாடே உற்று நோக்கும் அறவழிபோராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட அத்தனை விவசாயிகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என முழங்கினார். அதேபோல் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானமும் கொண்டு வந்தார்.
முதல்வர் சொன்ன மாதிரியே டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்காக அரிட்டாப்பட்டி மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்தனர். இதில் முதலமைச்சர் கலந்து கொண்டு வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




















