Easter: களைகட்டிய ஈஸ்டர் பண்டிகை.. தேவாலயங்களில் அலைமோதும் பக்தர்கள்.. தலைவர்கள் வாழ்த்து
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகையாக ஈஸ்டர் திகழ்கிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த பிறகு மீண்டும் உயிர்த்தெழுத 3வது நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகை:
இதன்படி, உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகைக்காக கடந்த ஒரு வார காலமாகவே தேவாலயங்கள் தயாராகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு தேவாலயங்கள் தயாராகி வந்தது. இதையடுத்து, நேற்று மாலை முதலே தேவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் பிரார்த்தனை:
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கையில் சிலுவை கொடியுடன் இயேசு உயிர்த்தெழுந்தார். இயேசு உயிர்த்தெழுதலை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வேளாங்கண்ணியில் நேற்று மாலை முதலே பக்தர்கள் இயேசு உயிர்த்தெழுதலை காண அலைகடல் போல குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பிரார்த்தனை வசதிக்காக ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் பட்டினப்பாக்கத்தில் உள்ள சாந்தோம் தேவாலயத்திலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நேற்று இரவு நடைபெற்றது. இயேசு உயிர்த்தெழுதலை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தலைவர்கள் வாழ்த்து:
மேலும் இன்று காலையிலும் தொடர்ந்து தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ராமதாஸ், செல்வப் பெருந்தகை, சீமான், விஜய் போன்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்தர்கள் அதிகம் கூடும் தேவாலயங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அதிகளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரளா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற உலக நாடுகளிலும் ஈஸ்டர் பண்டிகை களைகட்டி காணப்படுகிறது. வாடிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பிரார்த்தனைக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒருநாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய- உக்ரைன் இடையே ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.




















