(Source: ECI/ABP News/ABP Majha)
ஆஃபர் கொடுத்து அழைத்த சீனா.. இந்தியாவே முக்கியம் என மறுத்த சுல்தான் கதை
ஒருமுறை கருத்தரங்கிற்காக சீனா சென்றவரை அங்கேயே குடியேற எவ்வளோ வற்புறுத்தினார்கள். பணமா, வீடா, பொறுப்பா? என்ன வேண்டுமென கேட்ட சீனாவிடம், ‛என் நாடு...’ என பதில் சொல்லி, இந்தியாவுக்கு திரும்பினார் இஸ்மாயில்.
மண்ணையும் மக்களையும் ஒருவரால் இத்துணை நேசிக்க முடியுமா? அப்படி நேசிக்க முடிந்த ஒருத்தரால் மற்றவர்களையும் அதற்கு பழக்கப்படுத்த முடியுமா? கண்டிப்பாக முடியும் என காட்டும் நபர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் மண்புழு விஞ்ஞானி என பாசமாக அழைக்கப்படும் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில். சென்னையில் உள்ள புதுக்கல்லூரி துறை தலைவராக பலருக்கும் அவரை தெரியும்.
பூமியின், மீது அக்கறை கொண்டால் மட்டும் போதாது, அதனை அறிவியல் ரீதியாக அணுகவும் முடியும் என வியக்க வைப்பவர். 1951ல் அக்டோபர் மாதம் பாண்டிச்சேரியில் பிறந்தார் சுல்தான். சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அறிவே அற்றங் காக்கும் கருவி என மனதில் நிறுத்தி படித்தார். அப்போது ஜோசியம் பார்த்த ஒருவர் நீயெல்லாம் 8ம் கிளாசு தாண்ட மாட்ட என சொல்ல, இன்று 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார் சுல்தான் அகமது.
அப்பா தவறிய பிறகு, ஒரு நாள் வீட்டில் இருந்த சுல்தானுக்கு பசிக்க ஆரம்பித்தது. அத்தையிடம் தோசை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென ஏதோ யோசித்த அவர், அத்தை இந்த தோசை எப்படி சுட்றது என கேட்டார். எப்படி செய்யணும்னு எதையும் கேட்பதை விட கண்ணால பார்த்து கையால் செய் என்றார். இப்போதுவரை தன்னை இயக்குவது இந்த அட்வைஸ்தான் என நெகிழ்கிறார் சுல்தான்.
பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தார். சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியும் தந்தை இல்லா பிள்ளை என்ற பொறுப்பும் சேர 1968ல் புதுக்கல்லூரியில் கல்லூரியில் படிப்பை தொடங்கினார். அன்று கல்லூரிக்குள் நுழைந்தவர். அங்கிருந்து வெளியே வர 45 ஆண்டுகள் ஆனது. ஆம், மாணவனாக நுழைந்த கல்லூரி, அவருக்கு ஆசானாக மாறாக அடைக்கலம் கொடுத்தது. ஆசான், பேராசானாக மாறி, துறைத்தலைவனாக மாறி புதுக்கல்லூரியின் புதல்வனாக மாறி நின்றார் சுல்தான் அகமது.
கல்லூரி காலத்தில் தனது ஆசிரியர் நந்தகுமாரின் கற்பித்தலும் அணுகுமுறையும் சுல்தானை கவர்ந்தது. விலங்கியல் ஆசிரியராக இருந்த நந்தகுமாரின் ஈர்ப்பால் அதனையே துறையாக தேர்வு செய்தார். நன்றாக படித்து முடித்த அவர், மேற்படிப்புக்காக செல்ல நினைத்த போது, புதுக்கல்லூரியிலேயே, எம்.எஸ்.சி. ஆரம்பிக்க இங்கே படியேன் சுல்தான் என, கல்லூரி முதல்வர் சொல்ல அங்கேயே படித்தார்.
படித்து முடித்தாலும் கூட சுல்தானுக்கு வேலை கிடைக்கவில்லை. கல்லூரிக்கு போய்விட்டு வரலாம் என சைக்கிளில் சென்றார். கல்லூரி முதல்வரை பார்த்ததும் கண் கலங்க, ரூமுக்கு வா என அழைத்தார் முதல்வர். ஒரு வேலை இருக்கு, ஆனா ஆறு மாசம், பரவாயில்லையா? என கேட்க, இதுதான் தனக்கான பாதையை வகுக்க போகிறது என உணர்ந்தார் இஸ்மாயில். கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் 6 மாதத்தில் வேலை முடிந்தது கிளம்புங்கள் என சொன்னார்கள். ஆனால் அப்போதுதான் இயற்கை தனக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்து கல்லூரியை விட்டு அனுப்ப மறுத்தது என்கிறார். ஏதோ சில காரணங்களால் விரிவுரையாளர் ஒருவர் ராஜினாமா செய்ய அந்த பணி, இஸ்மாயிலுக்கு கிடைத்தது. அப்படியே ஆண்டுகள் ஓடின.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்
அடுத்து அவர் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் செய்கைகள். பல நாடுகளுக்கு பயணம், மண்புழு ஆராய்ச்சி, மண் வளம் காக்கு ஆராய்ச்சி, இயற்கையின் மீது ஈர்ப்பு அவர் வாழ்க்கையே முழுக்க முழுக்க மாறிப்போனது. பயங்கர பிசியாக மாறிப்போனார். அப்படி சென்று கொண்டிருக்கையில் இந்திய அரசோடு சேர்ந்து வேலை செய்யும் திட்டத்துக்கான ஆபர் வந்தது. ஆனால் அவர் மீதான பொறாமையால் அதனை கிழித்து குப்பையில் போட்டார்கள் சிலர். அங்கு கிடந்த கிழிந்த பேப்பரில் தனது பெயர் இருப்பதை பார்த்த சுல்தானுக்கு அதிர்ச்சி. ஆம், அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை யாரோ சிலர் ஒன்றுமில்லாமல் ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் துவளவில்லை. 32 எம்.பில், 17 பி.எச்.டி என ஆராய்ச்சியில் அடுத்த கட்டம் தொட்டார். மண்புழுக்கள் மூலம் உரம் தயாரிப்பதை உலகுக்கு அறிமுகம் செய்தார். மண்புழுக்களை பற்றி கேட்டால், உயிரோடு இருக்கும் போது நான் அவைகளை தொடுகிறேன், இறந்தால் அவை என்னை தொட்டுக் கொள்ளும் என்கிறார் இந்த மண்புழு விஞ்ஞானி.
ஒருமுறை கருத்தரங்குக்காக சீனா சென்றவரை அங்கேயே குடியேற எவ்வளோ வற்புறுத்தினார்கள். பணமா, வீடா, பொறுப்பா? என்ன வேண்டுமென கேட்டவர்களிடம் என் நாடு என பதில் சொல்லி, இந்தியாவுக்கு திரும்பினார். மண்புழு நகரம் அமைக்க சீனா அரசு இவரிடம் உதவி நாட, மீண்டும் சென்று உதவி வந்தார். இப்போதும் கூட தமிழ்நாட்டில் மாவட்டங்களில் மண்புழு நகரம் உருவாக்குங்கள் என்பார். மண்புழு இல்லா மண்ணை வைத்து என்னய்யா செய்ய போறீங்க, மண் மேல் உப்பக் கொட்டி, கொட்டி நாசாமாக்குறீங்களே என பிரச்னைகளை சொல்வதோடு நில்லாமல், அதற்கான தீர்வையும் முன்மொழியும் ஆராய்ச்சியாளர்.
மாணவர்கள், மண்புழு, இயற்கை – இந்த மூன்றையும் எப்போதும் அன்பு செய்யும் மனிதராக இருக்கும் பேராசிரியர் சுல்தான், குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தகுதி உண்டு, அவர்களிடம் எதையும் திணிக்காதீர்கள் என பெற்றோருக்கு சொல்வார். மாணவர்களை சந்தித்தால் தோல்விகளை கண்டு துவளாதீர்கள், உங்கள் கண்ணாடியில் தெரிபவரே உங்களின் உச்சபட்ச ரோல் மாடல், இயற்கை சொல்வதை கவனியுங்கள், அதன் திட்டம் எப்போதும் சிறப்பாக இருக்கும் என்பார்.
முதல்வர் ஸ்டாலினின் முதல் சந்திப்பிலேயே சிறு விவசாயிகள் பற்றி சிந்தியுங்கள், விவசாயம் சார்ந்த தொழில்களை உள்ளூர் இளைஞர்களுக்கு உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்துங்கள், இயற்கையோடு இணைந்த கல்வியை உருவாக்குங்கள் என பேசிவிட்டு வந்திருக்கிறார். வாழ்த்துகள் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில். மண்ணை காக்க திட்டம் தீட்டுங்கள்.
வெள்ளை மாளிகை, அமேசான், தி நியூயார்க் டைம்ஸ் - சர்வதேச அளவில் முடங்கிய வலைத்தளங்கள்..என்ன நடந்தது?