(Source: ECI/ABP News/ABP Majha)
DVAC Raid: எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் வீட்டில் எந்த ஆவணங்களும் இல்லை - அதிகாரிகள்
சுமார் 7 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கி திரும்பிச் சென்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் சண்முக ராஜா இல்லத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குனியாமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக அவருக்கு 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில்,தற்போது 55 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் வேலுமணியின் முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கி திரும்பிச் சென்றனர்.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2018-ஆம் ஆண்டில் அனுப்பிய புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் இன்று (10 ஆகஸ்ட் 2021) லஞ்சஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். வேலுமணி உட்பட அவர் தொடர்புடைய 17 பேர் மீது நேற்று (09 ஆகஸ்ட் 2021) லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. கங்காதாரன் குற்றமுறையீடு செய்ததன் அடிப்படையில் புகார் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதையடுத்து வேலுமணிக்குச் சொந்தமாக கோவையில் உள்ள 35 இடங்களிலும் திண்டுக்கலில் உள்ள ஒரு இடத்திலும் சென்னையில் உள்ள 15 இடங்களிலும் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு இடத்திலும் ரெய்டு நடத்தப்படுகிறது.
‘வேலுமணி அதிமுக அமைச்சரவையின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய சகோதரரான அன்பரசன் மற்றும் அவர்கள் இயக்கும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கனக்கான கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. வேலுமணி தனக்கும் தனக்குச் சார்ந்தவர்களுக்கும் ஆதாயம் தேடும் வகையில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்’ என அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்.