ஜெயலலிதா க்ளெவர் லேடி... அவங்க பேசும்போது அசந்துபோய் உட்கார்ந்திருந்தேன்.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ப்ளாஷ்பேக் பேட்டி
இப்படியான விசித்திரமான மனிதர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது நட்பு பற்றி சில சுவாரசியத் தகவல்களுடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.அந்த பேட்டியின் சில துளிகள் கீழே...
![ஜெயலலிதா க்ளெவர் லேடி... அவங்க பேசும்போது அசந்துபோய் உட்கார்ந்திருந்தேன்.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ப்ளாஷ்பேக் பேட்டி DURAI MURUGAN Reveals unknown Secrets of JAYALALITHAA | Exclusive Interview with Duraimurugan Speech ஜெயலலிதா க்ளெவர் லேடி... அவங்க பேசும்போது அசந்துபோய் உட்கார்ந்திருந்தேன்.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ப்ளாஷ்பேக் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/27/8a7ff540d2f1f4404fc017539789e5b0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திராவிட அரசியல் களத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் துரைமுருகன். மூத்த தலைவர் என்றாலும் இளைஞர்களுக்குச் சரிசமமாக கலாய்ப்பதில் ராஜாவுக்கு ராஜா எனலாம். எதிர்கட்சியினரையும் தனது நகைச்சுவைகளுக்காக எளிதில் சிரிக்கவைத்து விடுபவர். சோஷியல் மீடியாவில் thug-life துரைமுருகனுக்கான தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. படிக்க வைத்தது எம்.ஜி.ஆர். என்றாலும் அவர் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவுக்குச் சென்றபோது அவருடன் செல்லாமல் திமுகவிலேயே கருணாநிதியுடன் இருந்தவர். இருந்தாலும் துரைமுருகனின் திருமணத்தை 70களில் முன்னின்று நடத்தியது என்னவோ எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆர்., ஐ வாழவைத்த தெய்வம் என்பார். கருணாநிதியைத் தன் தலைவர் என்பார். ஆனால் ஜெயலலிதாவுடன் அவரது இறுதிக்காலம் வரைத் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டே இருந்தவர்.
இப்படியான விசித்திரமான மனிதர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது நட்பு பற்றி சில சுவாரசியத் தகவல்களுடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அந்த பேட்டியின் சில துளிகள் கீழே...
“நான் யாரிடமும் வன்மம் பாராட்டியது கிடையாது. ஒரு நிமிடம் சண்டை போடுவேன். அடுத்த நிமிடம் பேசுவேன். அந்தம்மாவுடனான நட்பும் அப்படித்தான். அவர் இறுதியாக வந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட, ’துரைமுருகன் ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா இருங்க ப்ளீஸ், நான் பேசவேண்டும்’ எனக் கெஞ்சினார். நாங்கள் வேண்டுமென்றே அன்றைக்குக் கூச்சல் செய்தோம். அவர் கோபப்பட்டு எழுந்து சென்றுவிட்டார். அதுதான் அவர் கடைசியாக வந்த சட்டமன்றக் கூட்டம். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். அவர் நான் படிக்கும் புத்தகத்தை எல்லாம் கவனிப்பார். ஒருமுறை சட்டமன்ற நூலகத்தில் வரலாறு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தேன். அதனை கவனித்த அவர், ’உங்க டிகிரி மேஜர் ஹிஸ்ட்ரியா?’ எனக் கேட்டார். ‘இல்லை எக்கனாமிக்ஸ்’ என்றேன். உடனே ,’வரலாற்றுக்கு ஃபிஷரைப் படிங்க’ என்றார்.
எனது நூலகத்தில் பிறகு ஃபிஷர் புத்தகமாக வாங்கி அடுக்கினேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஜெயலலிதா புத்திசாலியான நபர். எந்த ஒரு சப்ஜெக்டையும் தயாரிப்பாக படித்துக் கொண்டு வந்தால் மட்டுமே அவருடன் வாதாட முடியும். யார் பேசினாலும் கூர்ந்து கவனிப்பவர். ஒருநாள் பிளாஸ்டிக் பற்றி மட்டும் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் பேசினார்.
பிளாஸ்டிக் மீதான தடை குறித்த மசோதாவின் மீதான விவாதம் அது. இடையில்தான் அவர் கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார். அருகில் இருந்தவரிடம் எது பற்றிய விவாதம் எனக் கேட்டார். பிளாஸ்டிக் என பதில் அளித்தார் அவர். இதற்கிடையே ஏதோ ஒரு வாதம் வந்தது. இவர் இடைமறித்து எழுந்து பிளாஸ்டிக் குறித்து 30 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பேசினார். எந்தவித தயாரிப்பும் அவர் அதற்காக மேற்கொள்ளவில்லை. நான் வாயடைத்துப் போய் பார்த்தேன். அதே போல ஒருமுறை இலவச மின்சாரத்தை நிறுத்தி சட்டமன்றத்தில் அறிவிப்பு வந்தபோது நான் மிக ஆக்ரோஷமாகப் பேசினேன்.
பேச்சு முடிந்ததும் அவர் என்னிடம் வந்து, ‘நல்லவேளை நீங்கள் சினிமாத்துறையில் இல்லை. ஒருவேளை நீங்கள் வந்திருந்தால் சிவாஜி கணேசன் இருந்திருக்க மாட்டார்’ எனக் கூறினார். எந்த நிலையிலும் தன்னை இழக்காதவர் அவர். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் அதுதான். இன்னும் ஐந்து நிமிடத்தில் மேலே இடிவிழும் என்று சொன்னால் கூட இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கிறதே எனக் கூலாக இருப்பவர்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)