Heavy Rain in Chennai: கனமழை எதிரொலி: பெங்களூருக்கு சென்ற சென்னையில் தரையிறங்கவேண்டிய 10 விமானங்கள்: லிஸ்ட் இதோ!
சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கவேண்டிய 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கவேண்டிய 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று அதாவது ஜூன் 18ஆம் தேதி இரவு முதல் கனமழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. குறிப்பாக, சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தரையிரங்கவேண்டிய 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதாலும், காற்றுடன் கனமழை பெய்து வருவதாலும் துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், ஷார்ஜா, கொழும்பு, மஸ்கட் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
தாமதமாக புறப்பட்ட விமானங்கள்
கனமழை காரணமாக சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிபேட், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறுச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.