Chennai Traffic: எண்டே இல்லாமல் பெய்யும் மழை.. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த மக்கள்..!
சென்னையில் தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சென்னை:
நேற்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து மழையை ரசித்து வந்தனர். ஆனால் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் மக்கள் அனைவரும் அலுவலகத்திற்கு செல்கின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஜெமினி டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, அடையாறு, எம்ஆர்சி நகர், ராஜா அண்ணாமலைப்புரம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அலுவலகம் செல்லும் நபர்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் சிக்கித்தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மடிப்பாக்கம், ராம் நகர், கார்த்திகேயப்புரம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை, மெட்ரோ குடிநீர் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகல் கடும் சிரமத்திற்கு மத்தியில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.