Nellai Rains: ஊரெங்கும் மழை வெள்ளம்.. நெல்லை,தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு.. என்ன நிலவரம்?
கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்தது.
கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழையானது பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி மறுகாய் பாய்ந்தது.
மேலும் அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெள்ளமாக பாய்ந்தோடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் இரு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனிடையே மழை காரணமாக டிசம்பர் 23 ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மழை மற்றும் வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளதால் பேருந்து போக்குவரத்து சீராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள மக்களை மீட்கவும், உணவு, குடிநீர் வழங்கும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படியான நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 40000 கன அடி நீர் மட்டுமே தற்போது ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஆற்றில் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது. இதற்கிடையில்
கனமழை காரணமாக சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையம் வெள்ளம் சூழ்ந்ததால் குடிநீர் விநியோகம் சீராக அடுத்த 15 நாட்கள் வரை ஆகலாம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல் ஆலங்குளத்தில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். தாமிரபரணியில் வெள்ளம் அதிகமாக உள்ளதால் ஆலங்குள்ளத்தில் குடிநீர் பம்பிங் மோட்டரை இயக்க இயலாது. அதேசமயம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பகுதிகளில் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.