(Source: ECI/ABP News/ABP Majha)
டிராகன் பழ சாகுபடி செய்தால் இவ்வளவு லாபமா...! அரசு வழங்கும் அசத்தல் மானியம்...
தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டருக்கு 96,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
டிராகன் பழம் :
ஒரு காலத்தில் அரிதாக பார்க்கப்பட்ட டிராகன் பழங்கள், இப்போது மிக எளிதாக சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் கிடைக்கிறது. பழச்சாறு கடைகளில் கூட டிராகன் பழச்சாறு கிடைக்கிறது. இந்த டிராகன் பழங்களில் மூன்று வகை உள்ளது. ஒன்று இளஞ்சிவப்பு நிறத்தோல் இளஞ்சிவப்பு சதை பகுதி, இளஞ்சிவப்பு நிறத்தூள் வெள்ளை நிற சதை பகுதி, மஞ்சள் நிற தோல் வெள்ளை நிற சதை பகுதி. இதில் முதல் ரக டிராகன் பழங்களை தான் விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்து வருகிறார்கள்.
டிராகன் பழங்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் முதலீடாக குறைந்த பட்சம் ஐந்து லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். அதன் பிறகு மூன்று வருடங்களில் குறைந்த பட்சம் 20 லட்சம் வரை லாபம் பார்க்க முடியும் என்கின்றனர். மெக்சிகோ நாட்டை சேர்ந்ததாகவும் கள்ளி இனத் தாவரமாகவும் கருதப்படும் டிராகன் பழம், வியட்நாம், சீனா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து,இலங்கையில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. டிராகன் பழ உற்பத்தியில் முதலிடம் வியட்நாம் வகிக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பயிர் செய்யப்படும் பகுதிகள் :
இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் விருதுநகர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிறிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
வெப்ப மண்டலப் பயிரான டிராகன், 30 - 40 டிகிரி வெப்ப நிலை, மழையளவு 500 மிமீ – 1500 மிமீ உள்ள பகுதிகளில், களிமண் தவிர வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள். படரும் தன்மையுடையதால் செடிகள் படர அமைப்பு தேவைப்படுகிறது.
தோட்டக்கலை துறையின் மூலம் மானியம்
தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டருக்கு 96,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த பழங்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலில் பதிவு செய்தல் அல்லது www.tn.horticulture.gov.in இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை நாடி பயன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள் :
விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல்,பேங்க் பாஸ்புக் நகல்,புகைப்படம் 2 போன்ற ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.
செடிகள் நடவு முறை :
3×3 என்ற இடைவெளி விட்டு செடிகள் நட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1780 செடிகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு சிமெண்ட் தூணும் ஐந்து அடி முதல் 6 அடி இருக்க வேண்டும். ஒரு தூணுக்கு நான்கு தண்டுகள் நடவு செய்ய வேண்டும். செடிகளை தாங்கி வளர்வதற்காக தூண்களின் நுனிப்பகுதியில் வட்ட வடிவ சிமெண்ட் அமைப்பு அல்லது உயர் அமைப்பு பொருத்தப்பட வேண்டும்.
அறுவடை காலம் :
செடிகள் நட்டதிலிருந்து 40 முதல் 50 நாட்களில் பூக்கள் பூக்கும்.நட்டதிலிருந்து 15 முதல் 18 மாதங்களில் பழங்கள் அறுவடை செய்யலாம். மூன்று வருடங்களில் நிலையான மகசூல் பெற முடியும்.இந்த பயிரின் வாழ்நாள் 20 வருடமாகும் 3 ஆண்டுகளில் 15 முதல் 20 டன் வரை மகசூல் ஈட்ட முடியும். அதிக வருமானம் காண விரும்பும் விவசாயிகள், சந்தையில் அதிக தேவையுள்ள டிராகன் பழங்களை சாகுபடி செய்யலாம்.
சந்தையில் இவற்றின் விலை ஒரு கிலோ டிராகன் பழம் ரூ.200- 250 விலை வரை போகிறது. இப்பழங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை கவனத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை, இதன் விளைச்சலை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் டிராகன் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்க முன்வந்திருக்கிறது.
மேலும் டிராகன் பழங்களை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், இந்த நிலத்தில் ஊடுபயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்தால் இரட்டிப்பு லாபத்தை பார்க்க முடியும். எனவே விவசாயிகள் பிரதான பெயர்களான கரும்பு நெல் தவிர்த்து மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்தால், இரட்டிப்பு லாபம் பார்க்க முடியும் என்கிறார் தோட்டக்கலை அலுவலர் ராஜலக்ஷ்மி.