எப்போது ரத்தாகும் நீட் தேர்வு? உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கும் திமுக இளைஞரணி..
உண்ணாவிரத போராட்டத்தை எந்த மாவட்டங்களில் யார் தலைமையில் போராட்டம்? யார் தொடங்கி வைக்கிறார்கள்? என்ற முழு பட்டியலையும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்தவை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல், உண்ணாவிரத போராட்டத்தை எந்த மாவட்டங்களில் யார் தலைமையில் போராட்டம், யார் தொடங்கி வைக்கிறார் என்ற முழு பட்டியலையும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு - ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தி.மு.கழகத்தின் இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் கழக மாநிலங்களிலும் நாளை (20-08-2023 - ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ – மாணவியர், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கலந்து கொள்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொது மக்களும் தங்களின் மேலான கருத்துகளை எடுத்துரைப்பார்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை உள்ளிட்ட கழகங்களின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள். உண்ணாவிரத அறப்போராட்டப் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த அறப்போராட்டத்தை கழக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தொடங்கிவைக்கிறார்கள்.
அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள், இணை - துணை தலைவர்கள், இணை - துணை செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் விவரம் தலைமைக் கழக ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.