DMK Protest: சேலம்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் மத்திய பாஜக அரசின் மூன்றாவது விதிமுறை அறிக்கை கடந்த 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பேரில் இன்று சேலம் மாநகர் கோட்டை மைதானத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, "ஒரு கட்சி, தனது கட்சிக்காக 8 கோடி தமிழர்களை வஞ்சிக்கிறது. இவர்கள் எதையும் செய்வார்கள். நாம் சாக்கிரதையாக இருக்க வேண்டும். திமுக தலைவர் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தமிழகம் தான் இன்று இந்தியாவில் ட்ரெண்ட் செட்டிங் கட்சியாக உள்ளது. மாநிலங்களுக்கு நிதியை வழங்காமல் நிதி ஆயோக் கூட்டத்திற்கு எதற்கு செல்ல வேண்டும் என்றார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காதது கண்டிக்கத்தக்கது. ஆறு லட்சம் கோடி வரி செலுத்தும் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு லட்சம் கோடி மட்டுமே நிதியாக வழங்குகிறது. ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் கூடுதல் நிதியை ஒதுக்கிய மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், வாரணாசி ரயில் நிலையத்திற்கு மட்டும் 7000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்திற்கு 90 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இங்கும் ராமர் தான் இருக்கிறார். அங்கும் ராமர் தான் இருக்கிறார். ஆனால் நிதி மட்டும் குறைவாக வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.