Minister Duraimurugan: வேலை செய்யனும்; இல்லைனா நீக்கிவிடுவேன் - அமைச்சர் துரைமுருகன் அதிரடி..
மக்களவை தேர்தலில் சரிவர பணி செய்யவில்லை என்றால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என பொதுச் செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
பாலாற்றில் அணை கட்டுவது தொடர்பாக ஆந்திரா மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “ ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக ஆந்திரா நீர்வளத்துறை அமைச்சருக்கு அப்படி கட்டக்கூடாது என கடிதம் எழுதியுள்ளேன். மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இவ்வாறு செய்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் நடவடிக்கையாகும் என சுட்டிக்காட்டியுள்ளேன். அண்டை மாநிலமாக இருக்கும் போது இது குறித்து பேசியிருக்கலாம். ஆனால் பேசாமல் முடிவெடுப்பது தவறு என குறிப்பிட்டுள்ளேன்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைவரும் பணி செய்ய வேண்டும். சரிவர பணி செய்யவில்லை என்றால் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் கடிசியிலிருந்து நீக்கிவிடுவேன். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க நான் யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தான் பொதுச் செயலாளர். பணி செய்யவில்லை என்றால் மறுநாள் முரசொலி நாளிதழில் கட்டம் கட்டிவிடுவேன். ஒன்றிய செயலாளர்கள் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன். சரியாக இருந்தால் விட்டுவிடுவேன், இல்லை என்றால் தூக்கிவிடுவேன். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. முதலில் கட்சி தான். கொள்கையை பேசாமல் வாரிசு அரசியல் முன்வைத்து பாஜக தேர்தலை சந்தித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.