"உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" மக்களவையில் தயாநிதி மாறன் விளாசல்!
மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்காததை கண்டித்து எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி? உங்களுக்கு வந்தா ரத்தமா? என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் மக்களவையில் நேற்று முன்தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில் அவர்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்கிவிட்டு, மற்ற மாநிலங்களுக்கு நிதியை குறைவாக ஒதுக்கியிருப்பது மற்ற மாநிலங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா தவிர தென்னிந்தியா புறக்கணிப்பு:
மக்களவையில் இதுதொடர்பாக நேற்று பேசிய தயாநிதி மாறன் எம்.பி. பேசியதாவது, “இந்த முறை நாங்கள் 40க்கு 40 வென்றுள்ளோம், உங்களுக்கு கிடைத்தது 0. உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. தமிழ்நாடு மக்கள் உங்களை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள்.
ஆந்திராவைத் தவிர தென்னிந்தியா புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆந்திராவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றே நாங்களும் சொல்கிறோம். நாங்கள் பீகாருக்கும் ஆதரவு அளிக்கிறோம். ஆனால், மற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்.
எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரத்தமா?
நான் நிர்மலா சீதாராமனை நிறைய அறிந்தவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் புது கொள்கை புது கிழக்கு என்று கூறினார். புது கிழக்கு இந்தியாவில் பீகார் வந்துள்ளது. ஆந்திரா வந்துள்ளது. மேற்குவங்காளம் வரவில்லை. ஆந்திராவுடன் எல்லையை பகிர்ந்துள்ள தமிழ்நாடு வரவில்லை. தமிழில் ஒன்று சொல்வார்கள் எனக்கு வந்தா ரத்தம், உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று பேசினார்.
மத்திய சென்னை தொகுதி எம்.பி.யான தயாநிதி மாறனின் இந்த பேச்சு மக்களவையில் நேற்று தாக்கத்தை ஏற்படுத்தியது. தயாநிதி மாறன் மட்டுமின்றி இந்தியா கூட்டணியில் உள்ள பிற மாநில எம்.பி.க்களும் தங்களது மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தையே பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்ஜெட் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.