உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
இன்றைக்கு வீட்டு வரி உயர்ந்து விட்டதாக சொன்னார்கள். அதைப்பற்றி உங்களுக்கு என்ன அக்கறை?.. எது விலை ஏறினால் உங்களுக்கு என்ன கவலை?.. ஓட்டுப்போட்டவன் நடுரோட்டுக்கு வந்து புத்தி வரட்டும் என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.

திமுகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னை காரம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெஞ்சமின், எம்.எல்.ஏ., காரப்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இங்கு கூடிய கூட்டத்தைப் பார்க்கும் நாம் இன்னும் ஆளும் கட்சியாக இருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 1970களில் எப்படி திமுக கூட்டத்துக்கு தொண்டன் வருவானோ, அப்படித்தான் இன்றைக்கு வருகை தந்துள்ளீர்கள். திமுக ஆட்சி போன பிறகு நான் 3 கூட்டத்தில் பேசினேன்.
இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினர் திமுக தலைவர் தோல்வியடைந்து பார்க்கவில்லை. அதனால் திமுக தொண்டர்கள் துவண்டு போனார்கள். கருணாநிதி 50 ஆண்டுகாலம் நடந்த எந்த தேர்தலிலும் தோற்றதில்லை. 13 முறை அவர் வெற்றி பெற்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியால் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டின் தலைவராக இருந்த அவர் வரும் காலத்தில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார். எனவே தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும்.
இன்றைக்கு வீட்டு வரி உயர்ந்து விட்டதாக சொன்னார்கள். அதைப்பற்றி உங்களுக்கு என்ன அக்கறை?.. எது விலை ஏறினால் உங்களுக்கு என்ன கவலை?.. ஓட்டுப்போட்டவன் தான் நடுரோட்டுக்கு வந்து தலையில் மண்ணை அள்ளி போட்டால் தான் இந்த சமூகத்துக்கு புத்தி வரும். ஏசி பஸ் ஸ்டாப் கட்டுனோமே இப்போது அதில் விசிலுக்கு ஓட்டுப் போட்ட கூட்டம் கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் திமுகவின் வரலாறை பேசினால் தான் தெரிய வரும்.
கருணாநிதியை முதலமைச்சராக மாற்றிய தன்னுடைய சைதாப்பேட்டை தொகுதியில் அவர் பெரிய மருத்துவமனை கொண்டு வரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மா.சுப்பிரமணியன் கொண்டு வந்தார். ஆலந்தூரில் இருக்கும் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது. அந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளியின் உறவினர்கள் எல்லாம் ஓட்டு போட்டு தானே தவெக ஜெயித்தது. அதனால் அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது என்பதை வெளிப்படையாகவே சொல்கிறேன்.
இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள். 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம். மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்திருக்கிறார்கள். தண்ணீர் வரவில்லை, விளக்கு எரியவில்லை என புகார் சொல்கிறார்கள். வராமலே இருக்கட்டும். தமிழ்நாட்டிற்கு மு.க.ஸ்டாலின் செய்ததைப் போல யாரும் செய்யவில்லை. பலமுறை ஆட்சியில் இல்லாமல் பழக்கப்பட்டவர்கள் நாங்கள் என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















