Odisha Train Accident: ரயில் விபத்தில் அரசியல் செய்ய திமுக விரும்பவில்லை.. காரணம் யார்? சிஸ்டமா..? தனிமனிதரா..? - ஆ.ராசா கேள்வி
ஒடிசா ரயில் விபத்தில் திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த விபத்துக்கு யார் காரணம்? தனிமனிதரா? அல்லது சிஸ்டமா? என்ற கேள்வியை மக்களவை உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த விபத்துக்கு யார் காரணம்? தனிமனிதரா? அல்லது சிஸ்டமா? என்ற கேள்வியை மக்களவை உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் பேசியதாவது, இதற்கு முன்னர் இருந்த காலத்தில் இருந்ததைவிட தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலத்தில் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா செய்தியாளர் சந்திப்பில் மத்திய ரயில்வே அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே, நாங்கள் ஆட்சியில் இருந்த போது விபத்துகளை தடுக்க தனி சிஸ்டம் (டி-காஸ்)கொண்டுவந்தோம். ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பாஜக அதனை ரத்து செய்துவிட்டு ’கவாச்’ எனும் சிஸ்டத்தை கொண்டு வந்தார்கள். மொத்தம் 70 ஆயிரம் ரயில்வே பாதை உள்ள இந்தியாவில் வெறும் 1500 கிலோமீட்டருக்குத்தான் இந்த கவாச் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய ரயில் பாதையில் இரண்டு சதவீதம் கூட இல்லை என குற்றம் சாட்டும் போது அருகில் இருக்கும் ரயில்வே அமைச்சர் அமைதியாக இருக்கிறார் என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்னை ஏற்படும் போது முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும், சம்பந்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் எனக் கூறும் பாஜக மற்றும் அதிமுக ஏன் எதுவும் கூறாமல் உள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்கள் தரப்பில் இருந்து, ரயில்வேதுறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என நீங்கள் கூறவருகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டபோது, திமுக இந்த விசயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு தேவை மக்கள் காப்பற்றப்படவேண்டும். அதேபோல், இந்த விபத்துக்கு யார் காரணம்? தனி மனிதரா? சிஸ்டமா? இந்த விபத்து நடைபெறாமல் இருக்க நீங்கள் செய்த முன்னேற்பாடுகள் என்னென்ன என அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்க அனைத்து மாநிலங்களுக்கும் ரயில்வே அமைச்சர் இல்லாமல் செல்லும் பிரதமர் ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை. ரயில்வே நிலங்களை விற்றுள்ளீர்கள். வெறும் விளம்பரம் மற்றும் பிம்பத்தை வைத்துத்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. விளம்பரத்தின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பு மீது கவனம் செலுத்தியிருக்கலாம் என கூறியுள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் குறிப்பிட்டு குற்றம் சாட்டும் போது ரயில்வே அமைச்சரும் பிரதமரும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.