’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி இதுவரை வெளியிடவில்லை. முழுமையான எம்.பி.க்கள் இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் திமுக உரிய அழுத்தம் கொடுக்கவில்லை.
சேலத்தில் நீட் தேர்வை எழுதி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், தன் உயிரை மாய்த்துக்கொண்ட புனிதா என்னும் மாணவியின் வீட்டுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று, உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
’’நீட் தேர்வைக் கொண்டுவந்த திமுகவே, அதை ரத்து செய்வதாகக் கூறி இரட்டை வேடம் போடுகிறது. ஏனெனில் திமுக- காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதங்கள் ஆகியும், நீட் தேர்வை ரத்து செய்ய துவுமே செய்யவில்லை.
அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று என்ன பயன்?
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுகவே வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றன.
முழுமையான எம்.பி.க்கள் இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் திமுக உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால், ஒருவேளை நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாம்.
நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்கே?
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி வெளியிடுவதாகச் சொன்னார். ஆனால், இதுவரை வெளியிடவில்லை.
தமிழகத்தில் 1 கோடி பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய கையொப்பம் பெறுவதாக அறிவித்தனர். திமுக இளைஞரணி மாநில மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து படிவத்தை வைத்திருந்தனர். அவை அனைத்தும் காலுக்கடியில் விழுந்து கிடந்த காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் கண்டோம்.
நாட்டு மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்
நாட்டு மக்களை ஏமாற்றுவதில் திமுகவும் திமுக அரசும் வல்லவர்கள். மாணவர்கள் இவர்களால் ஏமாந்து நிற்கின்றனர். மாணவ- மாணவியர் மனவேதனையில், இப்படிப்பட்ட துயரமான செயலில் ஈடுபடக் கூடாது. பல்வேறு படிப்புகள் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தலாம்.
பிரதமரை பலமுறை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்த போதும், நீட் தேர்வு குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேற 7.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.’’
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.