Meeting Against Governor: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்: முடிவை மாற்றிய திமுக, கூட்டணி கட்சிகள்
ஆளுநரை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், “தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. ஏதோ ஒரு கற்பனை உலகத்தைக் கட்டமைத்துக் கொண்டு அங்கு காற்றில் கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.
இவை அனைத்தும் தமிழ்நாட்டில் சமூகச் சலசலப்பையும், தேவையற்ற பதற்றங்களையும், சர்ச்சைகளையும் விதைக்கும் கருத்துக்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன. 42 உயிர்களைப் பலிவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு இன்னமும் அனுமதி தராமல் இருக்கிறார்.ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும் அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை என்பதே எங்களது இறுதியிலும் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
பாஜகவை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல்
இதற்கிடையில் முதல்முறையாக அனுப்பப்பட்டு 131 நாட்களாக ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சட்டம் இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
கண்டன பொதுக்கூட்டம்
இதற்கிடையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், “ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
இன்னும் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்து எந்தவிதமான வருத்தமும் - விளக்கமும் அளிக்காத காரணத்தினாலும் வரும் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக மாலை 5 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.