தருமபுரம் ஆதீன குருபூஜை விழா: நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீனம்.! நாளை பட்டணப் பிரவேசம்!
தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் குருமூர்த்தங்களுக்கு எழுந்தருளி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இன்று 21 ம் தேதி காலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது. ஆதீன மரபு படி இன்று தருமை ஆதீனம் 27 வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு, மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்யவதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சன்னிதானம் குருவாக பாவிப்பதால் நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு செய்வது மரபு அதனடிப்படையில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார்.
முன்னதாக மனிதனை மனிதன் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட கோரி அறிக்கையை மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் வழங்கினார்.
அதன்பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும், பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியான ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மீக பேரவைகளை கண்டனம் தெரிவித்துனர். அதனை தொடர்ந்து பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து பட்டிணப் பிரவேசம் நிகழ்வை பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ள நிலையில் பல்வேறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் முக்கியஸ்தர்களும் நாளை நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ள குறிப்பிடத்தக்கது.