Tiruchendur: ரீல்ஸ் வீடியோ இடமாக மாறும் திருச்செந்தூர்.. கோயிலின் புனிதம் கெடுவதாக பக்தர்கள் வேதனை!
கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி திருச்செந்தூர் செந்திலாண்டவனை தரிசித்தால் வாழ்க்கையில் நிச்சயம் திருப்புமுனை ஏற்படும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடர்ச்சியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்டு வருவது பக்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளதோடு வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில்
தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கோயில்கள் உள்ளது. அதேசமயம் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை, திருத்தணி ஆகிய இடங்களில் அறுபடை வீடுகள் உள்ளது. இந்த 6 கோயில்களும் முருகனின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்பு கொண்டவையாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் மற்ற 5 படை வீடுகள் மலை மீது இருக்க, திருச்செந்தூர் மட்டும் நிலம் சார்ந்த இடத்தில் உள்ளது. அதுவும் கடற்கரையோரத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இது அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இதனால் திருச்செந்தூருக்கு உள்ளூர் முதல் உலகம் வரையிலான பக்தர்கள் தினசரி வருகை தருகின்றனர். கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி திருச்செந்தூர் செந்திலாண்டவனை தரிசித்தால் வாழ்க்கையில் நிச்சயம் திருப்புமுனை ஏற்படும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கோயில் நிர்வாகம் மீது புகார்
இப்படியான நிலையில் திருச்செந்தூரில் கடந்த ஜூலை மாதம் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில்களில் பல்வேறு நலத்திட்ட பணிகள் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டது. இது மக்களிடையே மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக இலவச தரிசனம், ரூ.100 தரிசனம் செய்ய குறைந்தது 4 மணி நேரம் முதல் அதிகப்பட்சம் 8 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் உண்டாகிறது.
அதேசமயம் கோயிலின் சுவாமி மண்டபம் அருகே பணம் பெற்றுக் கொண்டு விஐபி தரிசனம் வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பல பக்தர்கள் திருச்செந்தூர் வரை சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியில் நின்று கும்பிட்டு விட்டு வீடு திரும்பி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரீல்ஸ் வீடியோ மோகம்
இதுஒருபுறம் என்றால், மறுபுறம் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் இளம்பெண் ஒருவர் கோயில் சஷ்டி மண்டபம் அருகே பில்லா படத்தில் இடம்பெற்ற “சேவற்கொடி பறக்குதையா” பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ, நடனம் ஆடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆனால் அதையும் மீறி இளைஞர்கள் குழு ஒன்று சினிமா பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோயில் அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் இப்படி ஒரு சம்பவம் நடந்து கண்டுகொள்ளாமல் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாளுக்கு நாள் கோயிலின் புனிதம் கெடும் அளவுக்கு நடைபெறும் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த இளைஞர் குழுவை போலீசார் தேடி வருகின்றனர்.அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















