Bangaru Adigalar: பங்காரு அடிகளார் மறைவு.. மேல்மருவத்தூரில் குவியும் பக்தர்கள்.. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு நள்ளிரவு முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு நள்ளிரவு முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேல்மருவத்தூர் அதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் தலைமை ஆன்மீக குருவான பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று (அக்டோபர் 19) மாலை காலமானார். முன்னதாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறைக்குள் பெண்களே சென்று பூஜை செய்யலாம் என்கின்ற முறையை உருவாக்கி ஆன்மீகத்தில் பெரும் புரட்சி செய்தவர். பல்வேறு மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்கி மருத்துவம் மற்றும் கல்விச் சேவை ஆற்றியதால் அவரது புகழ் பரவியது. இப்படியான நிலையில் பங்காரு அடிகளார் மறைவு தமிழ்நாடு மக்களையும், உலகம் முழுவதும் இருக்கும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்களையும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளார் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (அக்டோபர் 20) காலை அவரது உடலுக்கு நேரிலும் அஞ்சலி செலுத்த உள்ளார்.
பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்படும் என வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அவரது உடல் மேல்மருவத்தூரில் உள்ள அடிகளார் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். கிட்டதட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பங்காரு அடிகளாருக்கு பூ மாலை, மலர் வளையம் உள்ளிட்டவற்றைக் கொண்டு மரியாதை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் கொண்டு வரும் மாலைகளை கோயில் நிர்வாகத்தினர் வாசலிலேயே வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இன்று காலையிலும் அதிக கூட்டம் கூடும் என்பதால் விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மேல்மருவத்தூர் கோயில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீசார் விரைந்து பணியாற்றி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

