G Square: ஜி ஸ்கொயர் விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்! கூடுதல் ஆணையர் கண்ணன் இடமாற்றம்!
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
என். கண்ணன் இடமாற்றம்..
ஜி ஸ்கோயர் நிறுவன உரிமையாளரை மிரட்டிய விவகாரத்தில் ஜூனியர் விகடனின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரது பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தென் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த என். கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகி புருஷோத்தம் குமார், சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், ஜி ஸ்கொயர் உரிமையாளர் ராமானுஜத்தை கெவின் என்பவர் தொடர்பு கொண்டார். தமக்கு ரூ50 லட்சம் வழங்காவிட்டால் முன்னணி செய்தி நிறுவன இதழ்களில் ஜி ஸ்கொயர் குறித்து அவதூறாக கட்டுரைகள் வெளியிட செய்வேன் என கெவின் மிரட்டினார். மேலும் ஊடகங்களில் ஜி ஸ்கொயர் குறித்து அவதூறு செய்திகள் வெளியிடப்பட்டன.
பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட கெவின், மாதம் ரூ50 லட்சம் வழங்காவிட்டால் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்கள் சிலர் மூலம், இத்தகைய அவதூறுகள் வெளியிடப்படும் என மிரட்டினார், என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார், கெவினை கைது செய்தனர். மேலும், இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன் மற்றும் யூட்யூபர்கள் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீதான இந்த வழக்குப்பதிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி கெவின் 50 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் புலனாயிற்று, அதே போன்று அப்பத்திரிக்கையில் பணிபுரியும் சிலருடன் பணப்பரிவர்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.
எனினும் இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி இவாகளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடந்து நடைபெற்று வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.