False Circular: ஸ்டாலின் திருவாரூர் வருவதாக தவறாக சுற்றறிக்கை அனுப்பிய ‛டீன்’
முதல்வர் திட்டமிடாத ஒரு வருகையை அறிவித்து மீண்டும் டெல்டாவை முதல்வர் புறக்கணித்தார் என்பதுமாதிரியான பேச்சுக்களுக்கு ஏன் இடமளித்தீர்கள் என சம்மந்தப்பட்ட டீனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாம்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்கியவர் வெற்றி பெற்ற பின்னர் திருவாரூரில் வந்து முதல் நன்றி அறிவிப்பு செய்வேன் என அறிவித்தார். மேலும் ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற கருத்து எழுந்தபோது உடனடியாக தஞ்சை மண்ணின் காவிரி கரையோரம் திருவாரூரை சேர்ந்த என்னை முதல்வர் ஆக்கியதற்கு நன்றி என தெரிவித்து தன்னை டெல்டா மாவட்டத்தில் பிரதிநிதியாகவும் காட்டிக் கொண்டார்.
இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் என்பதை பெருமையோடு திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் பேசி வந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கையொப்பமிட்ட கடிதம் அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது அந்த கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவியது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் இன்றைய தினம் திருவாரூர் வர இருப்பதாகவும் அதையொட்டி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையிட் இருப்பதாகவும் , இதன் காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு உரிய சீருடையில் வரவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதிகாரிகள் பரபரப்படைந்தனர். திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூருக்கு இன்றைய தினம் வரவில்லை எனவும், கடிதத்தில் உள்ள தகவல் உண்மையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர். முதல்வர் வருவதாக சமூக வலைதளங்களில் வந்த தகவலை நம்பி, மருத்துவமனை டீன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதை நம்பி மருத்துவ பணியாளர்களும், இன்று காலையில் சீருடையுடன் மருத்துவமனை வந்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் வலம் வந்த இந்த விவகாரம் குறித்து அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், உடனே சம்மந்தப்பட்ட டீனை அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர். முதல்வர் வருகை குறித்து உரிய அரசாணை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், எதன் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே டெல்டா பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் திட்டமிடாத ஒரு வருகையை அறிவித்து மீண்டும் டெல்டாவை முதல்வர் புறக்கணித்தார் என்பதுமாதிரியான பேச்சுக்களுக்கு ஏன் இடமளித்தீர்கள் என சம்மந்தப்பட்ட டீனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாம்.
சுற்றறிக்கைப்படி முதல்வர் ஸ்டாலின் தற்போது திருவாரூர் வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும், வரும் போது முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பரபரப்பை விட இந்த பரபரப்பு தான் தற்போது திருவாரூரில் தீவிரமாக உள்ளது.