Cow Breeders: சுட்டெரிக்கும் வெயில்! பால் மாடு வளர்ப்போர்கள் கவனத்திற்கு - இதை பின்பற்ற பால்வளத்துறை அறிவுறுத்தல்
Cow Breeders Steps: கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் கறவை மாடுகளின் நலன்களை பாதுகாக்க தமிழ்நாடு பால்வளத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் கறவை மாடுகளை காத்திட பால் உற்பத்தியாளர்களுக்கு பல அறிவுறுத்தல்களை தமிழ்நாடு பால்வளத்துறை தெரிவித்துள்ளது.
கறவை மாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், வெயில்காலத்தில் ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள, தமிழ்நாடு பால்வளத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவித்ததாவது,
கோடை காலம்:
தற்போதைய கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை கூடுதலாகக் காணப்படுவதால் கறவைகளுக்கு வெப்ப அயற்சியின் காரணமாக தீவனம் உட்கொள்ளும் திறன் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக, அவற்றின் பால் உற்பத்தி பெருமளவு குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, கறவை மாடுகளின் உற்பத்தித் திறனை பாதுகாத்திட உரிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?:
- சூரிய ஒளியின் நேரடித் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட கறவை மாடுகளை பகற்பொழுதில் நல்ல காற்றோட்டமான கொட்டகையிலும் அல்லது மரத்தடி நிழலில் இருக்குமாறு செய்ய வேண்டும்.
- கறவைகள் தண்ணீர் அருந்தும் குடிநீர்த் தொட்டிகளை நிழலில் இருக்குமாறும், அதில் எப்பொழுதும் தூய்மையான தண்ணீர் குடிக்க கிடைக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வெப்ப அயற்சியின் சோர்வை போக்க, தாது உப்புக் கலந்த தண்ணீரை கொடுப்பது நன்று.
- நிறைமாத சினையாக உள்ள கறவைகளில் வெப்ப அயற்சியின் தாக்கத்தினால் தீவனம் உண்பதில் நாட்டம் குறையும். இதனால் கருவில் வளரும் கன்று வளர்ச்சிக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆரோக்கியமான கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கோடைக்காலத்தில் கறவை மாடுகளுக்கு கோமாரி, அம்மை, அடைப்பான் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்குதலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய தடுப்பூசிகளை கறவை மாடுகளுக்கு போட வேண்டும்.
- மேலும், கோடைக் காலத்தில் வறட்சி காரணமாக ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் ஊறுகாய் புல், உலர்புல் போன்ற பதப்படுத்திய பசுந்தீவனங்களை இருப்பில் வைத்து கறவை மாடுகளுக்கு அளிப்பது பலன் தரும்.
- இந்த அறிவித்தல்களை, மாடு வளர்ப்போர்கள் மற்றும் பால உற்பத்தியாளர்கள் பின்பற்றுமாறு தமிழ்நாடு பால் வளத்துறையின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மாடு வளர்ப்போர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் , இந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து பயன்பெற உதவுங்கள்.