டொனால்ட் ட்ரம்ப்பால கூட கொடுக்க முடியாது! - விஜய்யை விமர்சித்த சி.வி. சண்முகம்!
மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி, கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வாக்குறுதிகள் குறித்து கேட்கின்ற மக்களையும்,அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அடித்து விரட்டுகிறார்கள்!

விழுப்புரம்: கார்,பங்களா வீடு தருகிறோம் என புதிதாக அரசியலுக்கு வந்த ஒருவர் கூறுகிறார் அதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட கொடுக்க மாட்டார் என விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விஜய்யை மறைமுகமாக சாடினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்களின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி எம் ஜி ஆர் திடலில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி வி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்கு பின்னால் இத்தனை ஆண்டு காலமாக அனைவராலும் கொண்டாட கூடிய தலைவர் எம்ஜிஆர்,இன்றைக்கு வருபவர்கள் எல்லாம் கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர்,குள்ள எம்ஜிஆர் என கூறலாம் ஆனால் ஒரே எம்ஜிஆர் எங்கள் எம் ஜி ஆர் மட்டும்தான் எனவும் இந்தியாவிலேயே தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருப்பதற்கு முழு காரணம் எம்ஜிஆர், அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் என தெரிவித்தார்.
அதிமுக கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கம் திமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காக தான், அப்படியாக எம்ஜிஆர் இருந்தவரை கோட்டை பக்கம் கருணாநிதியை வரவிடாமல் தடுத்த இயக்கம் எம்ஜிஆரின் அதிமுக இயக்கம் , அவரின் மறைவிற்குப் பின்னர் கட்சியில் பிளவு ஏற்பட்டதன் காரணமாகவே ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி.
மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி, கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வாக்குறுதிகள் குறித்து கேட்கின்ற மக்களையும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அடித்து விரட்டுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள் இவராக தற்போது திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார், அதில் அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை கொடுத்து,வீடு கட்டி தரப்படும், திமுக தேர்தல் வாக்குறுதி போல் இல்லாமல் மகளிர் அனைவருக்கும் 2000 வழங்கப்படும் எனவும் அதிமுக ஆட்சி காலத்தில் விடுபட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவும் தேர்தல் வாக்குறுதி தரும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதி தரும் ஆனால் புதிதாக வந்துள்ளவர்கள் ஒருவர் சொல்கிறார் கார்,பங்களா வீடு என கூறுகிறார் அதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட கொடுக்க மாட்டார் என விஜய்யை மறைமுகமாக சாடினார். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்படுகின்ற தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா என சிந்தித்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.





















