Cuddalore: கபடி போட்டியின் போது உயிரிழந்த வீரர்... நிதியுதவி வழங்கிய முதலமைச்சர்
கடலூரில் கபடி போட்டியின் போது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அளித்துள்ளார்.
கடலூரில் கபடி விளையாட்டின்போது வீரர் ஒருவர் மயக்கம் அடைந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதிரணி வீரரை மைதானத்தில் எதிர்கொண்டு திரும்பிய கபடி வீரரை எதிரணியை சேர்ந்த வீரர் தடுக்கும் போது மைதானத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இதய துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் கபடி போட்டியின் போது உயிரிழந்த வீரருக்கு முதலமைச்சர் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தே மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் வயது 21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த திரு.சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கபடி வீரர் விமல்ராஜ் (22). இவர் சேலம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணியை சேர்ந்த கபடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் விமல்ராஜ் அணியினர் கபடி போட்டிக்கு களம் இறங்கி விளையாடியுள்ளனர். இதில் விமல்ராஜ் வீரர்களுடன் களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீரர்களை எதிர்கொண்டு திரும்பியபோது, அவர் எதிர் தரப்பை சேர்ந்த கபடி வீரர் தடுக்க முற்படுகிறார். அந்த சமயத்தில் கீழே விழுந்த விமல்ராஜ் சற்று நேரத்தில் மைதானத்திலேயே மயங்கி விழுகிறார். மயங்கி விழுந்த அவர், இதய துடிப்பு நின்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்சியை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதில் அவர் கபடி போட்டியில் ஒருவரை பிடிக்க முயன்று பின்னர் கிழே விழுந்து உயிரிழக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்