பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..
அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தளங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை விசேஷமாக சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தொற்று பரவ காரணமாக தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலை திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும், பக்தர்கள் போலீசார் தடுப்புக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழம், சூடம், பத்தி உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டனர்.
அதைத் தொடர்ந்து, இந்த வாரம் சனிக்கிழமை புரட்டாசி 5 வது சனிக்கிழமை என்பதால் புகழ்பெற்ற தென் திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆன்மீக பக்தர்கள் தென்திருப்பதி சுவாமியை தரிசிக்க குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்தனர். கடந்த நான்கு வாரங்களாக களையிழந்த தென்திருப்பதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி இந்த வாரம் மிகவும் மக்கள் கூட்டத்தில் களைகட்டியது. பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனுக்காக முடி காணிக்கையும், அதிகாலை முதலே செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை என்றாலே பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படும். நிலையில் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை தென்திருப்பதி அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இன்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் ஆலயம் கடல் அலை போல் காட்சியளித்தது. தென் திருப்பதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் பக்தர்கள் வருகையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது.
கடந்த 4 வாரங்களாக பெருமாள் பக்தர்கள் சோர்வாக இருந்த நிலையில் இந்த சனிக்கிழமை ஒட்டுமொத்தமாக தங்களது குடும்பத்துடன் தரிசிக்க அதிகாலை முதலே ஆலயத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சாலை வியாபார பெருமக்களும், மொட்டை அடிப்பவர்கள், ஆலயத்தில் பணியாற்றும் பட்டாச்சாரியர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முடிக்காணிக்கை இலவச திட்டமும், கரூர் மாவட்ட கோவில்களில் செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு மதிய இலவச அன்னதான திட்டம் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. மொத்தத்தில் இந்த புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை பெருமாள் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தான்தோன்றி கல்யாண வெங்கட்ரமண சுவாமியை தரிசித்து வருகின்றனர்.