மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு: விடுதி வார்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சேத்துப்பட்டு அருகே தனியார் பள்ளி விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதிக்காப்பாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் அன்பு இல்லம் என்ற பெயரில் மாணவர்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை மகன் வீரபாண்டியன் வயது (36) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படிக்கும் சில மாணவர்களை தனியாக அறைக்கு அழைத்து சென்று ஹோமோ பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சைல்ட் லைன் உதவி மையத்திற்கு புகார்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் உத்தரவின் பேரில் சேத்துப்பட்டு காவல் துறையினர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விடுதிக்காப்பாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
அதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விடுதிக்காப்பாளர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து துறை பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக புவனேஸ்வரி ஆஜராகி வழக்கை விசாரித்தார். நீதிபதி பார்த்தசாரதி விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் துரை பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட துரைப்பாண்டியனை அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.