சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106-ஆக உயர்வு..
கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால், சென்னையில் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 1,500-க்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களிடம் எச்சரிக்கை விடுத்து, அபராதம் வசூலித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை சென்னையில் கொரோனா கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 600-ஆக இருந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை கொரோனா கட்டுப்பாடு தெருக்களின் எண்ணிக்கை 1,106-ஆக அதிகரித்துள்ளது. சென்னையிலே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 173 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.