Tomato: சினிமா பாணியில் 2.5 டன் தக்காளி திருடி பதுக்கல்.. திட்டம்போட்டு திருடிய கணவன், மனைவி கைது!
தம்பதிகள் இருவரும் காரை சரிசெய்ய கேட்டு சரக்கு வாகனத்தில் ஏறி சென்றுள்ளனர். 3 பேரில் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு சரக்கு வாகனம் பின்பு சென்றுள்ளனர்.
இரண்டரை டன் தக்காளியை எடுத்து சென்ற வாகனத்தை பதுக்கி வைத்ததால் இளம் கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100 கடந்து விற்பனை ஆனதால் தக்காளியை பதுக்குவதும், அதை திருடுவதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன. பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நியாயவிலை கடைகள் மூலம் தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த சூழலில் கர்நாடகாவை சேர்ந்த விவசாயிடம் இருந்து 2.5 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் தம்பதி இருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஹரியூரை சேர்ந்த விவசாயியான மல்லேஷ் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த இரண்டரை டன் தக்காளியை சரக்கு வாகனத்தில் வைத்து கோலார் தக்காளி மார்க்கெட்டு எடுத்து சென்றுள்ளார். அப்போது, வேலூர் அருகே தேவனஹள்ளி பகுதியில், சரக்கு வாகனத்தை வழிமறித்த கார் ஒன்று, தங்களின் வாகனத்தின் மீது அந்த சரக்கு வாகனம் மோதியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேதமடைந்த காரை சரிசெய்ய ரூ.10,000 ஆன்லைனில் செலுத்த வேண்டுமென அந்த காரில் இருந்த 3 பேர் விவசாயியிடம் பேரம் பேசியுள்ளார்.
பின்னர் தம்பதிகள் இருவரும் காரை சரிசெய்ய கேட்டு சரக்கு வாகனத்தில் ஏறி சென்றுள்ளனர். 3 பேரில் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு சரக்கு வாகனம் பின்பு சென்றுள்ளனர். குறிப்பிட்ட இடத்துக்கு சென்றதும் சரக்கு வாகனத்தில் இருந்த விவசாயியையும், ஓட்டுநரையும் கீழே தள்ளிவிட்ட தம்பதி இருவரும் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ருள்ளனர். சரக்கு வாகனத்தில் இருந்த தக்காளியை சென்னையில் விற்பனை செய்த தம்பதிகள் இருவரும் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் பெங்களூரு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட தக்காளியின் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாயி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆர்.எம்.சி. யார்டு போலீசார், தக்களியை கொள்ளையடித்த கும்பலை தேடி வந்தனர். பாஸ்கர் மற்றும் சிந்துஜா என அடையாளம் காணப்பட்ட தம்பதியை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.6 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.