’ரேஷன் கடையில் வேலை’ கொடுத்த பணம் ஸ்வாகா..!
ரேஷன் கடை ஊழியர் பணி என்பது அரசு வேலை இல்லை என்பது தெரிந்தும், போட்டிப்போட்டுக்கொண்டு இந்த வேலையை பெற கடந்த அதிமுக ஆட்சியில் பணத்தை கொடுத்தவர்கள், இப்போது வேலையும் வாங்க முடியாமல், பணத்தையும் திரும்ப பெற முடியாமல் திக்குமுக்காடிப்போய் நிற்கின்றார்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், எடையாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்து, பல இடங்களில் நேர்காணல்களே முடிந்துவிட்டன. பலருக்கு நேர்காணலுக்கான தேதி சொல்லி கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்குள் தேர்தல் வந்து எல்லா பணிகளும் அப்படியே முடங்கிப்போய்விட்டன. கடைசியில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு, திமுக தலைமையிலான புதிய அரசு பதவியேற்றிருக்கிறது.
ரேஷன் கடை பணியாளர் பணிக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஒன்றிய செயலாளர்களிடம் பலர் பணத்தை கொடுத்து வைத்திருந்தனர். இப்போது தங்களுக்கு அந்த பணி இவர்கள் மூலம் கிடைக்காது என்பதால், தாங்கள் கொடுத்த தொகையை திருப்பித் தரச் சொல்லி மாஜிக்களிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அரசியல்வாதிகளிடம் கொடுத்த பணத்தை வாங்குவது என்ன அவ்வளவு சாதாரணமா? விற்பனையாளர் பணிக்கு 3 முதல் 5 லட்சம், எடையாளர் பணிக்கு ஒன்று முதல் மூன்று லட்சம் என ஏகத்திற்கு பணத்தை வாங்கிச் சுருட்டிக்கொண்ட இவர்களிடம் இப்போது போய் பணத்தை கேட்டால், அதற்கு பதில் கூட சொல்வதில்லையாம். எப்படியாவது இந்த பணியை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லாம் ,இப்போது தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ரேஷன் கடைகள் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் வரும் என்றாலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் / மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட ரேஷன் கடைகளில் யாரை நியமிக்க சொல்கிறார்களோ அவர்கள் தான் நியமிக்கப்படுவார்கள் ; நியமிக்கப்பட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு வெளியானதும், வேலையில்லா பட்டதாரிகள் உள்பட லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இது அரசு பணி இல்லை என்றாலும் எப்படியாவது இந்த வேலையை வாங்கிவிட வேண்டும் என்று துடித்தவர்கள், தேர்வும், நேர்காணலும் கண் துடைப்புதான் என்பதை அறிந்து, தங்கள் பகுதி வட்டம் முதல் மாவட்டம் வரை பலரை பிடித்து பணிகேட்டு பணம் கொடுத்தார்கள். அப்படி கொடுக்கப்பட்ட பணமெல்லாம் இப்போது ’ஸ்வாகா’ஆகியிருக்கிறது.
விற்பனையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் மாதம் 6,250 ரூபாயும், கட்டுனர்களுக்கு 5,500 ரூபாயுமாக மட்டுமே இருக்கும்போது லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இந்த பணியை வாங்க முயற்சிப்பதற்கு காரணம், பொருட்களை ‘பிளாக்கில்’ விற்று நல்ல பணம் பார்க்கலாம் என்பதால்தான். ரேஷன் பொருட்களில் ஊழல் செய்ய முடியாது பயோ மெட்ரிக் முறை கொண்டுவந்துவிட்டோம், மெஜேஜ் அனுப்பும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது என சொன்னாலும் மக்கள் பொருளை டிசைன் டிசைனாக கொள்ளையடிப்பது நடந்துக்கொண்டேதான் இருக்கிறது.
இந்த முறையாவது நேர்மையாக தேர்வும், நேர்காணல்களும் நடத்தப்பட்டு உரிய முறையில் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பார்க்கலாம்..!