Congress Ministers: 59 ஆண்டுகளுக்கு பிறகு! விஜய் ஆட்சியில் அமைச்சராகும் கதர்சட்டைMLA-க்கள் - யார்? யார்? என்ன பதவி?
தமிழ்நாட்டில் விஜய் அமைச்சரவையில் இடம்பிடிப்பதன் மூலமாக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியில் பங்கு பெற உள்ளனர்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்த காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
அமைச்சராகும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்:
தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாத தவெக-விற்காக திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் விஜய்யுடன் கைகோர்த்தது. தவெக அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் நிபந்தனை விதித்திருந்தது.
இதன்படி, காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் விஜய்யின் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் அமைச்சராக பதவியேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
யார்? யார்?
விஜய்யின் அமைச்சரவையில் தற்போது வரை 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில் எஞ்சிய அமைச்சர்களும் பதவியேற்கும்போது காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
மேலூர் தொகுதியில் போட்டியிட கடைசி நேரத்தில் வாய்ப்பு பெற்ற விஸ்வநாதன் 60 ஆயிரத்து 80 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளரைக் காட்டிலும் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்பில் உறுப்பினராக பொறுப்பு வகித்த அனுபவமும் கொண்டவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் மதுரையில் போட்டியிட மதுரை காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். சுற்றுலாத்துறையை இவருக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சபீனை 1311 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழக காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ராஜேஷ்குமாரும் ஒருவர். இவர் கிள்ளியூர் தொகுதியில் தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தவெக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட உள்ளார்.
59 வருடங்களுக்கு பிறகு:
தமிழ்நாட்டில் பக்தவச்சலம் தலைமையில் கடைசியாக காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1967ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 59 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியையோ, அமைச்சரவையிலோ இடம்பிடிக்க முடியவில்லை. இந்த சூழலில், தற்போது தவெக ஆட்சியில் காங்கிரஸ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிக்கின்றனர்.
தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தேர்தலுக்கு முன்பாக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும், காங்கிரசுக்குமே வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். அமைச்சரவையில் இடம்பிடிக்க விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினருக்கும் தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















