62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
கொல்கத்தா, பிதான்நகர் பகுதியில் அமைந்துள்ள சஹா அணு இயற்பியல் நிறுவனம், மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும்.

கொல்கத்தா: மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சஹா அணு இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics - SINP) சார்பில் பல்வேறு அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் துணைப் பணிப் பிரிவுகளில் மொத்தம் 62 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் தகுதியின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் உள்ள 62 பணியிடங்களில் சயின்டிஸ்ட் ‘சி’ பணிக்கு 5 இடங்களும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘பி’ பணிக்கு 8 இடங்களும், டெக்னீசியன் ‘பி’ பணிக்கு 18 இடங்களும் உள்ளன. இதுதவிர உதவி நிர்வாக அலுவலர்-1 பணிக்கு ஒரு இடம், கீழ்நிலை எழுத்தர் பணிக்கு 7 இடங்கள், செக்யூரிட்டி கார்டு ‘ஏ’ பணிக்கு 8 இடங்கள், ஒர்க் அசிஸ்டென்ட் ‘ஏ’ பணிக்கு 11 இடங்கள் மற்றும் ஹல்வாய்-கம்-குக் பணிக்கு 4 இடங்கள் என மொத்தம் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
உதவி நிர்வாக அலுவலர் பணியிடம் பணிமாற்று அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி பணிக்கு ஏற்ப மாறுபடும். சயின்டிஸ்ட் ‘சி’ பணிகளுக்கு இயற்பியல், அப்ளைடு இயற்பியல், ஆப்டிக்ஸ், போட்டானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் தேவைப்படுகிறது. சில சயின்டிஸ்ட் பணிகளுக்கு தொடர்புடைய துறையில் பணி அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது.
சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகளுக்கு கணினி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளமோ தகுதி தேவைப்படுகிறது. சில பணியிடங்களுக்கு கூடுதல் பணி அனுபவமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெக்னீசியன் பணியிடங்களுக்கு பணியின் தன்மைக்கு ஏற்ப 10-ம் வகுப்பு அல்லது பிளஸ்-2 கல்வித்தகுதியுடன் தொடர்புடைய தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் தேவைப்படுகிறது. செக்யூரிட்டி கார்டு பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் உடற்தகுதி உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. ஒர்க் அசிஸ்டென்ட் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. ஹல்வாய்-கம்-குக் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ மற்றும் பணி அனுபவம் தேவைப்படுகிறது.
எனவே, பொதுவாக 10-ம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டம் வரையிலான கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வாய்ப்புகள் உள்ளன.
வயது வரம்பும் பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. சயின்டிஸ்ட் ‘சி’ பணிக்கு அதிகபட்ச வயது 33 ஆகவும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘பி’ பணிக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெக்னீசியன் ‘பி’ மற்றும் ஹல்வாய்-கம்-குக் பணிகளுக்கு அதிகபட்ச வயது 25 ஆகவும், கீழ்நிலை எழுத்தர், செக்யூரிட்டி கார்டு மற்றும் ஒர்க் அசிஸ்டென்ட் பணிகளுக்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி தகுதியுடைய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறையும் பணிக்கு ஏற்ப மாறுபடும். சயின்டிஸ்ட் ‘சி’ பணிகளுக்கு நேர்முகத் தேர்வு முக்கியத் தேர்வு முறையாக உள்ளது; தேவைக்கேற்ப தகுதித் தன்மையிலான எழுத்துத் தேர்வும் நடத்தப்படலாம். சயின்டிபிக் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணிகளுக்கு முதற்கட்ட எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து தொழில்திறன் தேர்வும் நடைபெறும். கீழ்நிலை எழுத்தர் பணிக்கு எழுத்துத் தேர்வுடன் தட்டச்சுத் திறன் தேர்வு நடத்தப்படும். செக்யூரிட்டி கார்டு பணிக்கு உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
ஒர்க் அசிஸ்டென்ட் பணிக்கு பல்தேர்வு வினாக்கள் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ஊதியத்தைப் பொறுத்தவரை, பணிகளுக்கு ஏற்ப 7-வது ஊதியக் குழு ஊதிய நிலைகள் வழங்கப்படுகின்றன. சயின்டிஸ்ட் ‘சி’ பணிக்கு லெவல்-10, சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘பி’ பணிக்கு லெவல்-6, டெக்னீசியன் ‘பி’ மற்றும் ஹல்வாய்-கம்-குக் பணிகளுக்கு லெவல்-3, கீழ்நிலை எழுத்தருக்கு லெவல்-2, செக்யூரிட்டி கார்டு மற்றும் ஒர்க் அசிஸ்டென்ட் பணிகளுக்கு லெவல்-1 ஊதிய நிலை வழங்கப்படுகிறது. இதனுடன் விதிமுறைகளின்படி அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர படிகளும் கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணமாக சயின்டிஸ்ட் ‘சி’ மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘பி’ பணிகளுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற பணிகளுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பணிமாற்று அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுகின்றனர். குறிப்பிட்ட ஒதுக்கீட்டுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் விதிகளின்படி கட்டண விலக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஜூலை 31-ம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், வரும் செப்டம்பர் 15-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் முழுமையான PDF நகலை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து செப்டம்பர் 18-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் நிறுவனத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் பணிமாற்று அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கொல்கத்தா, பிதான்நகர் பகுதியில் அமைந்துள்ள சஹா அணு இயற்பியல் நிறுவனம், மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். அணு இயற்பியல் உள்ளிட்ட அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் ஆராய்ச்சிகளில் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.
எனவே, மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் தொழிற்பயிற்சி தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குப் பொருந்தும் பணியிடத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி, அனுபவம், வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் கட்டணம் மாறுபடுவதால், விண்ணப்பிக்கும் முன் சஹா அணு இயற்பியல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்த்து தகுதியை உறுதி செய்வது அவசியம். அதிகாரப்பூர்வ இணையதளம்: saha.ac.in.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















