நடிகர் விவேக் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
நடிகர் விவேக் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க நடிகர் விவேக் இறப்பு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் அனுப்பியுள்ள அந்த புகாரில், ‛நல்ல உடல்நலத்துடன் இருந்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு இறந்திருக்கிறார் என்றும், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்த மத்திய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், ’ தனது புகாரில் தெரிவித்துள்ளார்.