கோவையில் கொடூரம்.. வடகிழக்கு மாநில மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்.. நடந்தது என்ன?
கோவையில் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் வடகிழக்கு மாணவிகள், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் தங்களுக்கு சிலர் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.

கோவையில் தங்கியுள்ள வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவிகளை குறிவைத்து நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் வடகிழக்கு மாணவிகள், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் தங்களுக்கு சிலர் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
வடகிழக்கு மாநில மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்:
மணிப்பூர், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் சிலர், கோயம்புத்தூருக்கு வந்து படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும், ராமலிங்கம் காலனி, பாரதி பூங்கா சாலை - 2, அழகேசன் சாலை, ரமணா கவுண்டர் லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் வசித்து படித்து வருகின்றனர்.
இவர்களை குறிவைத்து, மர்ம நபர்கள் சிலர் பாலியல் ரீதியாக தொல்லை தந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மணிப்பூரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறுகையில், "ஐந்து மாதங்களுக்கு முன்பு, மதியம் 2 மணியளவில், பல்கலைக்கழகத்திலிருந்து ராமலிங்கம் காலனியில் உள்ள எனது அறைக்கு நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், என்னை பார்த்த உடன் திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றிவிட்டார்" என்றார்.
கோவையில் கொடூரம்:
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், இதுகுறித்து பேசுகையில், "காரில் வந்த ஒருவர் பின்தொடர்ந்து வந்து, ஆரம்ப சுகாதார மையம் அருகே என்னை தடுத்து நிறுத்தினார். கார் கண்ணாடியை திறந்து விட்டு, தனது அந்தரங்க உறுப்புகளை காட்டினார்" என்றார்.
இதுகுறித்து மற்றொரு மாணவி ஒருவர் கூறுகையில், "கடந்த வருடம், பாரதி பார்க் சாலை-2 இல் உள்ள ஒரு உணவகத்திற்கு இரண்டு மாணவிகள் சென்றிருக்கின்றனர். பைக்கில் வந்த இரண்டு ஆண்கள், அவர்களுக்கு முன்னால் பைக்கை நிறுத்திவிட்டு, மாணவி ஒருவரை தகாத இடத்தில் தொட்டுள்ளார். அவர் கூச்சலிட்டபோது, அவர்கள் ஓடிவிட்டனர். ஆனால், அருகில் இருந்தவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை" என்றார்.
மாணவிகளுக்கு அட்வைஸ் செய்த HOD:
இந்த அனைத்தும் சம்பவங்களும் சாய்பாபா காலனி காவல் நிலையத்திலிருந்து 1 கி.மீ சுற்றளவில் நடந்திருக்கின்றன. குறிப்பிட்ட இந்தப் பகுதியில் காவல்துறை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், மாணவிகள் அதே பிரச்னைகளை இன்னும் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஏனெனில், வடகிழக்கு மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்களுக்கு போலீஸ் எங்கெல்லாம் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. புகார் அளித்த பிறகும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவிகள் கூறுகிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து பல்கலைக்கழகத்தில் புகார் தெரிவித்துபோது, மாணவிகளை சரியாக உடை அணியுமாறு துறைத்தலைவர்கள் (HoDs) அறிவுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.





















